தமிழ்நாடு

tamil nadu

"நெல்லையில் இன்னும் 2 மாதத்தில் மாதிரி விண்வெளி மையம்..விண்வெளி மையத்திற்குச் செல்ல தயாரா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:13 PM IST

Nellai Science Center: திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் தென் மண்டல இயக்குநர் சஜூ பாஸ்கரன், ரூ.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் மாதிரி விண்வெளி மையத்தினை ஆய்வு செய்து, இன்னும் 2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவித்தார்.

Nellai Science Center
நெல்லை சயின்ஸ் செண்டர்

பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் தென் மண்டல இயக்குநர் சஜூ பாஸ்கரன் பேட்டி

திருநெல்வேலி: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 27 மாவட்ட அறிவியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் உள்பட ஐந்து மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்துக்குள் தண்ணீர் புகுந்து கடும் சேதமானது.

குறிப்பாக, அறிவியல் மையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல், கட்டடத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளும் சேதமாகின. இந்த நிலையில், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் தென் மண்டல இயக்குநர் சஜூ பாஸ்கரன், இன்று (மார்ச் 5) மாவட்ட அறிவியல் மையத்திற்கு வந்து, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ரூ.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி விண்வெளி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மாதிரி விண்வெளி மையத்தில் ராக்கெட் மாதிரிகள், விண்வெளி வீரர்களின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விண்வெளி வீரர்களுடன் செல்பி எடுக்கும் செல்பி பாயிண்ட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருநெல்வேலி மழை வெள்ளத்தால் அறிவியல் மையத்தில் சுமார் ரூ.5 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளும் வெள்ளத்தால் சேதமாகி உள்ளன. அவற்றை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்னும் ஆறு மாதத்தில் முழுமையாக மாவட்ட அறிவியல் மையம் சீரமைக்கப்படும். தற்போது ரூ.70 லட்சம் மதிப்பில் மாதிரி விண்வெளி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் அது பயன்பாட்டிற்கு வரும். சந்திரயான், மங்கள்யான் செயற்கைக் கோள்களுக்குப் பிறகு, மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, இந்த மாதிரி விண்வெளி மையம் அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பண்ணாரி வனத்தில் 3 நாட்களாக உயிருக்குப் போராடிய தாய் யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details