தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் வீடியோ மூலம் பாடம் கற்க மணற்கேணி இணையதளம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைப்பு!

Manarkeni Website Launch: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கான ‘மணற்கேணி’ இணையதளச் சேவையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

‘மணற்கேணி’ இணையதளச் சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
‘மணற்கேணி’ இணையதளச் சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 6:09 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கான மணற்கேணி’ இணையதளச் சேவையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

காணொளி வழியாக பாடங்களைக் கற்பதற்காக ‘மணற்கேணி’ என்ற செயலி கடந்த ஆண்டு 2023 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாடப்பகுதிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்செயலியின் வெற்றியைத் தொடர்ந்து, மணற்கேணி இணையதளச் சேவையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் (Shiv Nadar Foundation) இணைந்து, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளி அமைத்துப் பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. மணற்கேணி செயலி ஆசிரியர்கள் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொளி பாடங்கள் கிட்டும் என்ற நிலையைப் போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இச்செயலியின் நோக்கம். மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருளாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொளி வாயிலாக விளக்கங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு காணொளி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனைச் சரிபார்க்கும் வசதியும் உள்ளது. 6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொளியாகத் தரப்பட்டுள்ளன. பொதுத் தேர்வில் கேட்கப்படும் எந்த வகையான கேள்விகளுக்கும் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் ஜேஇஇ (JEE) போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராக முடியும். கடந்த பல ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய வினா-விடை வங்கி ஒன்றும் உண்டு. போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள் என அனைத்தையும், மணற்கேணியைத் துணைக்கருவியாகக்கொண்டு பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் மாணவர்களை மிக எளிதாக ஆசிரியர்கள் வெற்றி கொள்ள வைக்க முடியும்.

இந்தக் காணொளிகள் 2டி மற்றும் 3டி அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. மணற்கேணி https://manarkeni.tnschools.gov.in‌ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6 ஆம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி அளிக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மணற்கேணி செயலி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. Web portalஇல் கொண்டு வந்து கணினியில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒரு கருத்து (concept) எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். அன்றைய முதலமைச்சர் கருணாநிதி 4 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை செயல்முறை கல்வியைக் கொண்டு வந்தார்.

தனியார்ப் பள்ளிகள் கரோனா காலத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தி கல்வியைக் கொண்டு சேர்த்தது. அதனை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தற்போது கொண்டு சேர்த்து வருகிறோம். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை நிர்ணயித்து, அரசுப் பள்ளிகளின் மாணவர்களை அதிகம் சேர்க்க முடிவு செய்துள்ளோம். திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோடைக் காலம் தொடங்கியதால் ஷாமியானா அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைக்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பொதுவாக 8 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருப்பார்கள். அது பற்றி இன்னும் முழுத் தகவல் கிடைக்கவில்லை.

மாணவர்கள் ஹால் டிக்கெட் மறந்து விட்டு, பதற்றம் அடையக் கூடாது என்று அதைத் தேர்வு எழுதும் போது கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு, “நிதி நிலைமை சீர் அடையும் போது தேவைகள் நிறைவேற்றப்படும். ஏற்கனவே, மூன்று முறை அவர்களை அழைத்துப் பேசி உள்ளோம். உரிமையோடு உங்களிடம் தான் கேட்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த உரிமையை என்றும் மதிப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசின் நடவடிக்கை என்ன?.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details