தமிழ்நாடு

tamil nadu

'நூல் இரவல் சேவை' அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 5:42 PM IST

Minister Anbil Mahesh: வெளிப்படைத்தன்மையுடன் புத்தகங்களை கொள்முதல் செய்தவற்கான இணையதளத்தினையும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தொடங்கி வைத்தார்.

சென்னை
சென்னை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'நூல் இரவல் சேவை'யை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தினையும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தொடங்கி வைத்தார்.

வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024 அடிப்படையாகக் கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பதிப்பாளர்கள் நூலகங்களில் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்குத் தங்களைப் பதிவு செய்து நூல்களுக்கான பதிவுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

புத்தகங்கள் தேர்வுக் குழுவில், துறை சார் வல்லுநர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மதிப்பிலான நூல்களை இணையதளம் வழித் தேர்வு செய்து பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டு முழுவதும் விண்ணப்பம் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இணையதளத்தில் இருக்கும். ஒவ்வொரு காலாண்டுக்கு வாரியாக நூல் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. https://bookprocurement.tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்துள்ளது. புத்தகப் பதிப்பாளர்களிடம் மிக விரைவாக வெளிப்படைத்தன்மையாக நூல் கொள்முதல் உருவாக்கிக் கொடுப்போம் என முதலமைச்சர் தெரிவித்தார்.

அதனை இன்று செயல்படுத்தும் விதமாக இணையதளச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து வீட்டிற்கு நூல்களை எடுத்துச் செல்ல நூல் இரவல் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்த புத்தகங்கள் அதிகப்படியான வாசகர்களால் படிக்கப்படுகிறது, அதிகமாக வாசகர்களுக்குத் தேவைப்படுகிறது என்று தெரிய உதவுகிறது. கடந்த கால ஆட்சியில் எப்படி எல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புத்தகங்கள் வாங்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.

புத்தகங்களைக் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இதுபோன்று நூலகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஸ்மார்ட் புக் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எந்த புத்தகத்தை அதிகளவில் வாசகர்கள் படிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் பிற நூலகங்களில் பதிவேடுகளில் உள்ள தகவலின் அடிப்படையில் வாசகர்கள் அதிகம் விரும்பும் புத்தகங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

நூல்கள் கொள்முதல் செய்வதற்கான கொள்கையில் மாற்றங்கள் தேவைப்பட்டால் பதிப்பாளர்கள் கூறினால் அதனையும் பரிசீலனை செய்வோம். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நூலகத் துறைக்கு அதிகப்படியான கவனங்கள் செலுத்தப்படுகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாண்டியன் ஸ்டோர் தனம் குடும்பத்தில் சோகம்.. அகால மரணமடைந்த அண்ணன்!

ABOUT THE AUTHOR

...view details