1 லட்சம் லஞ்சம் கேட்டு லாரியை சிறைபிடித்த சுரங்கத்துறை அதிகாரி தேனி: கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா மைதீன்(35). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து எம்.சாண்ட் மற்றும் கட்டிடம் பணிகளுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது ஓட்டுநர் கட்டுமான பணிகளுக்காக எம்.சாண்ட் மணலை நேற்று (ஜனவரி 24) இரவு உரிய லாரியில் ஏற்றிக் கொண்டு தேனியில் இருந்து கம்பம் நோக்கி சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது தேனி மாவட்ட கனிமவள சுரங்க உதவி இயக்குநர் கிருஷ்ண மோகன் தேனி வீரபாண்டி அருகே லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் ஆவணங்களைக் கேட்டதாகவும், பின் உரிய ஆவணங்களைக் காட்டிய போதும் லாரியை வீரபாண்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த லாரியின் உரிமையாளர், கனிமவள சுரங்க உதவி இயக்குநரை நேரில் சென்று சந்தித்து லாரி குறித்துக் கேட்டுள்ளார். அப்போது மாதந்தோறும் எனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், தற்போது ஒரு லட்சம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்பேன் என்று கூறி லஞ்சம் கேட்டதாக லாரியின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் தனது லாரியை மீட்டுத் தரும் படியும், லஞ்சம் கேட்ட கனிமவள சுரங்க உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 100 நாட்களைக் கடந்து முழு கொள்ளளவுடன் நிரம்பி வழியும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் - விவசாயிகள் மகிழ்ச்சி..