சென்னை:தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்ததாக 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது.
இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன் வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.