சென்னை: சென்னை கண்ணகி நகர் அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதான இரண்டு பெண்களுக்கு, தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை அடுத்த கண்ணகி நகர் போக்குவரத்து பணிமனை பின்புறம் கஞ்சா விற்றதாக, அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான அம்மு, ஜான்சி ராணி 19 ஆகிய இரண்டு பெண்களை, கடந்த 2018 ஜூலை 14ல் பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்த தலா 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை செய்த போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அம்மு, ஜான்சி ராணி ஆகியோருக்கு, தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் போட்டி! - Nellai Congress Candidate