சென்னை:சமீபகாலமாகப் போதைப் பொருள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சாவை விடக் கொடுமையான போதைப் பொருளான எல்எஸ்டி(Lysergic acid diethylamide) இந்தியாவில் கடத்தப்பட்டு வருவதாக இந்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நாட்டின் பல பகுதிகளில் சோதனை செய்து பாலிவுட் துணை இயக்குநர், மென்பொருள் பணியாளர்கள் என 15க்கும் மேற்பட்ட நபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் இந்தியா முழுமைக்கும் டார்க் வெப் (DARK WEB) மூலமாக வெளி நாட்டிலிருந்து வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதில் கைது செய்யப்பட முக்கிய நபரில் ஒருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி.
இவரிடம் மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (52) சொந்தமாகத் தொழில் செய்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இவர் கடந்த 2021ம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்ததாகப் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் 2023ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி முன்னதாக தான் பார்த்து வந்த தொழிலைக் கைவிட்டு முழுவதுமாக போதைப் பொருளை விற்பனை செய்வதில் களம் இறங்கியுள்ளார். டார்க் வெப் எனும் சட்டவிரோதக் கள்ளச் சந்தையில் ஹரேகிருஷ்ணா எனும் நிறுவனத்தைப் பதிவு செய்து எல்எஸ்டி போதைப் பொருளை, இறக்குமதி செய்து இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், கொச்சி,மும்பை, சூரத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.