தமிழ்நாடு

tamil nadu

சட்டவிரோத பட்டாசு ஆலைகளுக்கு பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? - உயர்நீதிமன்ற கிளை கேள்வி! - illegal Firecracker Factory issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 10:03 AM IST

High Court Madurai Branch
High Court Madurai Branch

illegal Firecracker Factory issue: சட்டவிரோத பட்டாசு ஆலைகள் சம்பந்தமாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன?, பட்டாசு ஆலைகளுக்கு எங்கிருந்து பட்டாசு தயாரிக்கும் பொருட்கள் கிடைக்கின்றன? என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிஎஸ்பி பவித்ராவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூர், வெம்பக்கோட்டைப் பகுதியில் அனுமதியின்றி நடந்த பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கர தீவிபத்து நிகழ்ந்து பலர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது, இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர்கள் உள்ளிட்டோர் அனுமதியின்றி பட்டாசுகளை எப்படித் தயாரிக்க முடிகிறது? என்பது குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்கும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி பவித்ராவை, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்துள்ளதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் சம்பந்தமாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன?. அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன?, சட்டவிரோதமாகச் செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு எங்கிருந்து பட்டாசு தயாரிக்கும் பொருட்கள் கிடைக்கின்றன? என்பது குறித்து டிஎஸ்பி பவித்ரா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஐசியுவில் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details