தமிழ்நாடு

tamil nadu

காமராஜர் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற இது ஒன்றுதான் வழி.. கல்வியாளர்கள் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:56 PM IST

Madurai Kamaraj University: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர்கள் இப்பல்கலைக்கழகத்தை காப்பாற்ற தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

காமராஜர் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற இது ஒன்றுதான் வழி

மதுரை: தமிழகத்தின் 2-வது பெரிய பல்கலைக்கழகம் என்ற பெயரை பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வைப்பு நிதி காலியான நிலையில், நிதி நெருக்கடியால் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர்கள், பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கியுள்ளனர்.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை கூறுகையில், “அரசு திட்டமிடுகிறபோது உயர் கல்வித்துறைக்கு, பல்கலைக்கழகத்திற்கு என்ன தேவைப்படும் என்பதை அறிந்து, அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல, தமிழ்நாட்டிலுள்ள 18 பல்கலைக்கழகங்களுக்கும் நிதியை ஒதுக்கீடு செய்தால், அது பல கோடி செலவாகும். அந்த நிதியை நான்கு தவணைகளாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வந்தால், இந்த சிக்கல் இல்லாமல் மற்ற பணிகள் சிறப்பாக நடைபெறும்.

உயர்கல்விக்கென்று அரசு ஒதுக்குகிற பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி, பெரும்பாலும் ஊதியத்திற்குரியதாகவே உள்ளது. தற்போது ஒதுக்குகின்ற நிதி, ஊதியத்திற்கே அது போதுமா என்ற நிலையிலேயே உள்ளது. ஒரு சிறிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு செலவினம் ரூ.18 கோடி என்று வைத்துக் கொண்டால், இதனை அரசு நான்கு தவணைகளில் வழங்க வேண்டும்.

அதற்கு ஒப்புக்கொண்டு அதனை கொடுத்துவிட்டால் துணைவேந்தர், நிதியைப் பற்றிய கவலையின்றி ஆய்வுகளுக்கான கல்விப் பணிகளைச் செய்து கொண்டிருப்பார். ஆசிரியர்களுக்கான ஆய்வுத் திட்டங்களை வகுத்தளித்துக் கொடுப்பார். இதன் மூலம் உலக அரங்கில் நமது நாட்டினுடைய அறிவாண்மையை, வளர்ச்சியை பறைசாற்ற முடியும். ஆனால், எனக்கு தெரிந்து ஒரு பல்கலைக்கழகத்திற்கு தொகுப்பு நல்கையாக ரூ.5 கோடி அளவுக்கு கொடுக்கப்படுகிறது.

பிறகு செலவுகள் செய்த பிறகு இறுதி கருத்துரு அனுப்பும்போது, அதன் மீது பல்வேறு தடைகள் எழுப்பப்பட்டு, அதனால் நிதி குறைக்கப்படுவதும் உண்டு. ஆடிட் அப்ஜெக்ஸன் என்று சொல்லக்கூடிய ஒரு தணிக்கை தடை ஏற்படும்படி செய்வது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றது. உள்ளாட்சி நிதித் தணிக்கையின் சார்பில், பல்கலைக்கழங்களில் நிதி அலுவலர் என்று ஒருவர் இருக்கிறபோது, அவர் இந்த செலவுகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று பரிந்துரை செய்த பிறகுதான் துணைவேந்தர் கோப்புகளில் கையெழுத்திடுவார்.

அப்படியிருக்க, எங்கிருந்து தணிக்கை தடை என்ற ஒன்று வருகிறது? அப்படியானால் நிதி அலுவலர், பதிவாளர் என்றெல்லாம் ஒரு கோப்பு சுற்றி வருவதற்கு என்ன பொருள் இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிய தேவையுள்ளது. தணிக்கை தடை ஏற்படுவதற்கு முன்னரே, இது போன்ற சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தின் சாராம்சம்” என்றார்.

மேலும், இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழிலாளர் மேலாண்மைத் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் பூமி.பத்மானந்தம் கூறுகையில், “இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல் பாடங்களைத் தவிர, மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை போன்றவற்றையும் காமராஜர் பல்கலைக்கழகமே கவனித்து வந்தது. அதன்பிறகு, அந்தந்த துறைக்கு பல பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக உருவாகிவிட்டன. அதுமட்டுமன்றி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பல தோன்றின. இந்த சூழல் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தை வெகுவாக குறைத்தது.

அடுத்ததாக இந்த பல்கலைக்கழகம் தனது சேவையை விரிவுபடுத்தியிருந்த எல்லைகள் அனைத்தும் சுருக்கப்பட்டுவிட்டன. காரணம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் உருவான பல்கலைக்கழகங்கள், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கான எல்லை வரம்பை சுருக்கிவிட்டன.

மூன்றாவதாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்த தொலைநிலைக் கல்வி, பொன் முட்டையிடும் வாத்தாக பல கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்தது. கல்வி எங்கெல்லாம் செல்ல முடியாத நிலையுள்ளதோ அங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தொலைநிலைக் கல்வியின் இலக்காக இருந்தது. இந்தியா மட்டுமன்றி உலகநாடுகள் பலவற்றிலும் தனது கல்விச் சேவையை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி வாயிலாக விரிவு செய்திருந்தது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் வாயிலாகத்தான் அனைத்துத் துறைகளும் தங்களை வளப்படுத்திக் கொண்டன.

முன்னாள் துணைவேந்தர் வ.சு.ப.மாணிக்கனார் பல்கலைக்கழகத்திற்கென்று கார்ப்பஸ் நிதி ஒன்றை உருவாக்கினார். எதிர்காலத்தில் நிதி ஆதாரத்தால் வேறு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்று அவர் காலத்தில் இந்த கார்ப்பஸ் நிதி சுமாராக ரூ.500 கோடி அளவிற்கு உருவாக்கப்பட்டது.

நான்காவதாக, கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்த துணைவேந்தர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள்தான் இந்த உபரி நிதியைக் காலி செய்தார்கள். உபரியாக வைத்திருந்து அனைத்து நிதியும் இந்தக் காலகட்டத்தில்தான் காலி செய்யப்பட்டது. தேவையற்ற பணி நியமனங்கள், கட்டுமானங்கள் பலவற்றால் நிதி அனைத்தும் கரையத் தொடங்கியது” என்றார்.

இதையும் படிங்க:பாஜக அழைப்பு விடுத்தது உண்மைதான்.. ஆனால் நான்.. திவ்யா சத்யராஜ் பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details