தமிழ்நாடு

tamil nadu

இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற பண்பாடு மோடிக்கு தெரியாதா? - நாஞ்சில் சம்பத் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 1:16 PM IST

Nanjil Sampath: ஜவஹர்லால் நேரு, கருணாநிதி போன்றவர்களை விமர்சனம் செய்கிறார் மோடி, இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற பண்பாடு பிரதமர் மோடிக்கு தெரியாதா? என திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

Nanjil Sampath
நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் பேச்சு

தூத்துக்குடி:'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது-பிறந்தநாள் விழா, தமிழக பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்,"பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தினை அபாயம் சூழ்ந்து இருக்கிறது. இந்தியாவை மீட்கும் குருச்சேத்திரம் வரும் நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவை வாழத் தகுதியற்ற நாடாகப் பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை மோடி சந்திப்பது இல்லை. நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை, அதிபராக வேண்டும் என்ற நோக்கில் மக்களைப் பலி கொடுத்து இருக்கிறார்.புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போதும் புறக்கணிக்கப்பட்டார்.

தமிழகத்தைத் திட்டமிட்டுப் பழி வாங்குகிறார் மோடி. தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமருக்கு வெறுப்பு உள்ளது. ஏழை எளிய மக்கள் வாழும் நாட்டில்தான் காஸ்ட்லியான பிரதமரைப் பார்க்க முடிகிறது. நேரு, கருணாநிதியை விமர்சனம் செய்கிறார். இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற பண்பாடு பிரதமர் மோடிக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மழை வெள்ளத்தின் போது மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டனர். டெல்லியில் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து மழை வெள்ளத்திற்கு நிதி கேட்டார். அதே போன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.

ஆனால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இருந்த போதிலும் தமிழக அரசு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ6 ஆயிரம் நிவாரணம் வழங்கியது. தமிழக அரசு நிதிநிலை அறிக்கை மூலமாக இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் கிடைக்கும்.

இன்றைக்கு ஜனநாயகம் ஊறுகாய் பானைக்குள் சென்று விட்டது. இந்தியா கூட்டணிக்கு அகரம் எழுதியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி வெல்லும், அதற்கு வித்திட்டவர் மு.க.ஸ்டாலின் என்று உலகம் பறைச்சாற்றும். நரேந்திர மோடியின் வீழ்ச்சி மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது" என்றார்.

கூட்டத்தில், திமுக, மற்றும் காங்கிரஸ், மதிமுக ,விடுதலைச் சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:லஞ்சம் ஒழிப்பு குறித்து அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது" - பி.ஆர்.நடராஜன் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details