தமிழ்நாடு

tamil nadu

“தமிழகத்தில் காங்கிரஸ் பலத்திற்கு ஏற்ப திமுக சீட் கொடுப்பார்கள்” -மயூரா ஜெயக்குமார் நம்பிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 8:38 AM IST

Mayura Jayakumar: காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு பலம் உள்ளது, அதற்கு ஏற்றவாறு திமுக சீட் கொடுப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்
காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்

காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள அம்மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங் (Szarita Laitphlang) செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த செவ்வாய் அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பான விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக அமல்படுத்தப்படும்.

குறைந்தபட்ச ஆதார விலை 50% அளிக்கப்படும் என அறிவித்து ஆட்சிக்கு வந்த பாஜக, உச்ச நீதிமன்றத்தில் இதனை செயல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளது, நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறியிருந்தனர். ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய அரசிற்கு இதனை நினைவூட்டும் வகையில், தலைநகரை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்று, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாஜக ஆளும் ஹரியானாவில் காவலர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொண்டு விரட்டி அடித்ததை இந்த நாடு அறியும். பாஜக அரசு மற்றும் ஹரியானா அரசு அமைதிப் பேரணி நடத்திய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பு, மோடி நாட்டு மக்களுக்கு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தும் கொண்டு வரப்படும், அனைவரது வங்கிகளிலும் 15 லட்சம் பணம் வரவு என பல்வேறு உறுதிமொழிகளை அளித்திருந்தார். ஆனால், பத்தாண்டுகள் ஆட்சி நடைபெற்று முடிந்த நிலையில், இதுவரை அந்த பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவில்லை.

மோடி வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை 20 கோடி பேர் வேலைவாய்ப்புகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடைபெறவில்லை, கடந்த 45 ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இதை மத்தியில் ஆளும் மோடி அரசு நிரப்பாமல் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் குறித்த தீர்ப்பை வழங்கியது. இதில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தப் போவதாகக் கூறி தேர்தல் பத்திரத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. 2017ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை பாஜக அரசு 6,566 கோடி தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,123 கோடி மட்டுமே தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது. நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் 9 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறது.

2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், விவசாயத்திற்கு எதிரான பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலைகள்தான் அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என்று பாஜக கூறியிருந்த நிலையில், தற்போது வரை எத்தனை பேருக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது? அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்களில் காகிதத்தில் இடம் பெற்றுள்ளதே தவிர, எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற தவறான நடவடிக்கைகளால், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் க்ரூட் ஆயில் விலை குறைந்துள்ள நிலையிலும், தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. மேலும், கடந்த 10 ஆண்டு காலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மக்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்துள்ளது.

மணிப்பூர் கலவரங்கள் நடைபெற்றதிலிருந்து இதுவரை அங்கு செல்லாத பிரதமர் மோடி, தேர்தல் நடைபெறும்போது வாக்குகள் பெறுவதற்காக மட்டுமே அங்கு செல்வார்” என தெரிவித்தார். தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்தான கேள்விக்கு, காங்கிரஸ் உயர்மட்டக் குழு இது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அது குறித்து நான் பதில் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து எடுக்கும் என்றார்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது, நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்குவதாகவும், இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலையின்மை அடைவார்கள் என தெரிவித்தார்.

பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, நாட்டில் உள்ள பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருகிறது. இந்தியாவின் கடன் சுமை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு 55 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இவை அனைத்தும் கடந்து அநியாயங்கள் முடிவுக்கு வரும், அதற்கான நேரம் துவங்கிவிட்டது” எனப் பேசினார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பலம் உள்ளது, அதற்கு ஏற்றவாறு திமுக சீட் கொடுப்பார்கள். பாஜகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணி அமைப்போம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி!

ABOUT THE AUTHOR

...view details