சென்னை:சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (அமலாக்கப்பிரிவு) மகேஷ்குமார் அகர்வால், மற்றும் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் தலைமையில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மேற்கொண்டு வரும் Anti Drug Clubs-யைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து Anti Drug Clubs குழுவைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேட்ஜ் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், 'போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம். கஞ்சாவைத் தடுக்கும்போது போதை மாத்திரைகளுக்கு மாறியுள்ளார்கள். அதை அறிந்து உடனே நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருந்துக் கடைகளில் போதை மாத்திரைகள் வாங்கினார்கள்; அதைத் தடுத்தோம். கூரியர் மூலமாக மாறியது; அதையும் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஜாபர் சாதிக் தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் மத்தியப் போதைப் பொருட்கள் அதிகாரிகள் இதுவரை எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு காவல்துறை தர தயாராக உள்ளோம். மத்திய ஏஜென்சிகள் போதைப் பொருட்கள் பறிமுதலை விட, தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம். மொத்தம் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்கு சென்னையில் உள்ளது. முதல் வழக்கு 2013ஆம் ஆண்டு எம்.கே.பி. நகர், ஆர்.கே.நகரில் உள்ளது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'புரோட்டான் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, முதலில் தகவலைக் கேட்டோம் தரவில்லை. பின்னர் மத்திய தகவல் தொழில்நுட்பம் மூலமாகக் கேட்டோம். தற்போது தகவல் தருகிறார்கள். 1 வருடத்திற்கு மேல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் விபிஎன் (VPN) நிறுவனத்தை நீக்க வேண்டும். தற்போது அதுபோன்று பயன்படுத்தப்படும் விபிஎன் நிறுவனத்தை நீக்கப் பரிந்துரை கடிதத்தை மத்திய அரசிற்கு சென்னை காவல்துறை அனுப்பியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது எனக் கூறி இருப்பது குறித்தான கேள்விக்கு, முறையான புள்ளிவிவரங்களோடு நான் உங்களுக்கு விவரித்துள்ளனே். அதற்கு நான் பதில் கூற இயலாது. தமிழ்நாட்டில் பள்ளிகள் அருகே இருக்கக்கூடிய கடைகளில் போதைப் பொருள் விற்பனை குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்கள் பெண்ணியம் என்ற பெயரில் தங்கள் திறமைகளை மறந்து விடக்கூடாது - மருத்துவர் சுதா சேஷையன் அறிவுரை!