தமிழ்நாடு

tamil nadu

தஞ்சை சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தேரோட்டம்! - Chithirai Festival at Kumbakonam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 12:02 PM IST

Chithirai Festival 2024: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, மேள தாளம் தாரை தப்பட்டை முழங்க தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Chithirai Festival 2024
Chithirai Festival 2024

தஞ்சை சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

தஞ்சாவூர்:கும்பகோணத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சாரங்கபாணி சுவாமி கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இது பூலோக வைகுண்டம் எனவும் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்துச் சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது. தற்போது விழாவின் முக்கிய நிகழ்வாக, 9ம் நாளான இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

சுமார் 500 டன் எடையுடன் 30 அடி விட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில், 110 அடி உயரம் கொண்ட இந்த தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 10 அடி உயரம் கொண்டது. மேலும், வடம் ஒவ்வொன்றும் 5 டன் எடை கொண்டது. இவ்வளவு பிரமாண்டமான தேரை நாதஸ்வர மேள தாளம், தாரை தப்பட்டை, கேரள ஜெண்டை மேளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இத்திருவிழாவில் அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது, பல அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சாராங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்களை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி, தேரோட்டத்திற்கு மத்தியில் விஷ்வரூப அனுமன் வேடமிட்ட நபர், தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.

தஞ்சை சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

மேலும், இதில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில், இணை ஆணையர் உமாதேவி உள்ளிட்ட அறநிலையத்துறையினர் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன், மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்பாடுகளை கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

இதையும் படிங்க: சித்திரை திருவிழா: வாராரு வாராரு அழகர்..! பச்சைப் பட்டு உடுத்திய அழகர்.. விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்..! - Madurai Kallazhagar Festival

ABOUT THE AUTHOR

...view details