தமிழ்நாடு

tamil nadu

40 நாட்கள் கடந்து மக்கள் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அண்ணாமலை குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 2:18 PM IST

Annamalai: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசு விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, உடனடியாக மக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai K condemns passengers facing issues at Kilambakkam bus terminus
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை சில மாற்றங்கள் உடன் கிளாம்பாக்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், பயணிகள் பயணிப்பதற்கு போதிய பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் பயணிகள் தென்மாவட்டங்களுக்குச் செல்ல போதிய பேருந்து இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம் வந்த ஒரு சில பேருந்துகளும் முன்பதிவு செய்த பேருந்துகளாகவே இருந்துள்ளது. அதனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த பயணிகள், பேருந்த மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில், "திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்தவித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசர கதியில் பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து 40 நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை.

நேற்றைய தினம் இரவு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளை சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில்கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக்கேடு.

நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு, முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப்பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ப்ரீ வெட்டிங் ஷூட்டை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் ரீல்ஸ் எடுத்த 38 மாணவர்கள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details