திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனைக் காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய திருத்தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலமாகும்.
இக்கோயிலில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்- கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா இன்று நடைபெற்றது. கோயிலில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா அன்புமணி திருக்கடையூருக்கு வருகை தந்தனர்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சௌமியா தம்பதியினருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் கோயில் உள்துறை செயலாளரும் தருமபுரம் ஆதீனம் மடாதிபதியின் சகோதரருமான விருத்தகிரி வரவேற்பு அளித்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலச நீர் கொண்டு தம்பதியினருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தம்பதியினருக்கு அன்புமணி ராமதாஸ், மனைவி, மகள் குடும்பத்தினருடன் கலச அபிஷேகம் செய்தார்.
தொடர்ந்து, மாலை மாற்றும் வைபவம் மற்றும் மாங்கல்ய தார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தம்பதியினரை வாழ்த்திய அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, சௌமியாவின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி ஆகியோர் குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா அன்புமணி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். உறவினர் நிகழ்ச்சி என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துவிட்டார். கோயிலுக்கு வந்த பாமகவினர் மற்றும் பொதுமக்கள் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது - திருமாவளவன் வெளியிட்ட விசிக விருது பட்டியல்! - VCk Awards