சென்னை: சென்னை திருமங்கலம் அருகே தனியார் உணவகம் ஒன்றில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கூடியிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உணவு அறிந்து கொண்டு இருந்த 20 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களின் இருந்த துப்பாக்கிகள், பட்ட கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 20 ரவுடிகள் கைதானது குறித்து சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திருமங்கலம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் உணவு அருந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து 20 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள்,11 பயங்கர ஆயுதங்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் மேல் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் இருந்த வெளியே வந்த ஜெயபால்(63), முத்துக்குமார்(30), சொக்கலிங்கம்(24) உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.