தமிழ்நாடு

tamil nadu

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி.. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 3:13 PM IST

Kil Pavani youth died: பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க முற்பட்டபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

a youth died drowned at Erode Kil Pavani canal water
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி

ஈரோடு: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொட்டக்கொம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(30). கூலித் தொழிலாளியான இவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் சகோதரர் ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் சுதன், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பவானிசாகர் அணைக்கு வந்துள்ளார்.

அப்போது, பவானி சாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் நீரில் தமிழ்செல்வன் மற்றும் சுதன் இருவரும் இறங்கிக் குளிக்க முயன்றுள்ளனர். தற்போது, பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இருபுறக் கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கின்றது. இந்த நிலையில், குளிப்பதற்காக வாய்க்கால் நீரில் இறங்கிய இருவரும், நீரில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், நீரில் மூழ்கி மாயமான சுதனை உடனடியாக உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் தமிழ்ச்செல்வனை மீட்க முடியாத காரணத்தால், பவானிசாகர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வனை தீவிரமாகத் தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிப் பலியான தமிழ்ச்செல்வனின் உடல், சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மிதப்பதைக் கண்டறிந்த தீயணைப்புத் துறையினர், அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பவானிசாகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்களுடன் வந்த இளைஞர், சரியாக நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "லஞ்சம் ஒழிப்பு குறித்து அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது" - பி.ஆர்.நடராஜன் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details