கன்னியாகுமரி: வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ரயில் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலமாகக் கஞ்சா மற்றும் பல வகையான போதைப் பொருட்கள் கடத்தி வருகின்றன. இவ்வாறு கடத்திக் கொண்டு வரப்படும் போதைப் பொருட்களைப் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு நடைபெற்று வரும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காவல்துறை மூலமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலம் திப்ரூகாரில் இருந்து கன்னியாகுமரிக்குக் கடந்த 7ஆம் தேதி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இந்த ரயில் நேற்று இரவு (மார்ச் 11) நாகர்கோவிலுக்கு வந்தது. பயணிகளை இறக்கி விட்டுவிட்டு ரயில் புறப்படத் தயாரான போது ரயிலின் முன் பகுதி பெட்டியில் ஒரு பேக் கேட்பாரற்று கிடந்தது. இதனைக் கவனித்த டிக்கெட் பரிசோதகர் அந்த பேக்கை எடுத்துப் பார்த்து உள்ளார்.
அதில், அனுப்புநர் மற்றும் பெறுநர் என்று எந்த முகவரியும் இல்லை. எனவே சந்தேகத்தின் பெயரில் அதனைச் சோதனை செய்தபோது அதில் சிறு சிறு பொட்டலங்கள் இருந்து உள்ளன. இது குறித்து அவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
அதன் பெயரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து பேக்கை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த பேக்கில் சிறு சிறு பொட்டலங்களாக மொத்தம் நான்கு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா பொட்டலங்களை ரயிலில் கடத்தி வந்தது. யார் இது எங்கு இருந்து கடத்தி வரப்பட்டது, யாருக்காகக் கடத்தி வரப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து, கஞ்சா பொட்டலங்களை மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்து அவற்றைக் குமரி மாவட்டத்தில் உள்ள போதைப் பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கூறும்போது, "இவை வட மாநிலங்களிலிருந்து ரயிலில் கடத்திக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசாரின் சோதனை நடைபெற்று வந்ததால் பார்சலை அப்படியே நடைமேடையில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம். கடத்திக் கொண்டு வந்த நபர் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்… ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தம்!