சென்னை: தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 31,336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் 6,029 பள்ளிகளில் துவக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் smart classroom அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கும் திறன்மிகு வகுப்பறைகள் செயல்பாட்டில் இருக்கும். அதே போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. 7,956 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விபரத்தின் படி, ஒன்றாம் வகுப்பில் 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 637 பேரும், நடுநிலைப்பள்ளிகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 621 பேரும் என 3 லட்சத்து 67 ஆயிரத்து 258 பேர் சேர்ந்தனர்.
ஆனால் 2022 -23ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 703 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் 94 ஆயிரத்து 924 மாணவர்கள் என 3 லட்சத்து 16 ஆயிரத்து 627 பேர் சேர்ந்தனர். 2023-24ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 579 பேரும், நடுநிலைப் பள்ளிகளில் 78 ஆயிரத்து 355 பேரும் என 2 லட்சத்து 66 ஆயிரத்து 934 பேர் சேர்ந்தனர்.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதியே துவக்கியதுடன், அரசின் நலத்திட்டங்களாகக் காலை சிற்றுண்டி, வண்ணமயமான சீருடை, காலணிகள், அரசால் வழங்கப்படும் சலுகை, உயர்கல்வி உதவித்தொகை போன்றவற்றை எடுத்துக் கூறியும், தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக திறன்மிகு வகுப்பறை (smart classroom) ஆங்கில மொழி ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளிட்டவற்றை மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி சேர்க்கை நடைபெற்று வருகிறது.