ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த முறையில் ஐபிஎல் விளையாடுவது சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.
குடலிறக்க பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ் இன்னும் பூரண குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. முழுமையாக குணமடையாத நிலையில், மார்ச் 24ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது கஷ்டம் தான் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் இடையே பேசிய மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், சூர்யகுமாரின் உடல் நலன் குறித்த பிசிசிஐயின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், எப்பொழுதும் பிட்னஸ் பிரச்சினைகளில் இருந்து வருவதாலும் அதேநேரம் உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் குழு தங்களிடம் உள்ளதால் உடற்தகுதி அடிப்படையில் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க முடியும் என்றும் கூறினார்.
மும்பை அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் வரிசையில் ரோகித் சர்மா, திலக் வர்மா மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் இடம் பெறலாம் என்பதால் சூர்யாகுமார் யாதவ் மிடில் ஆர்டர் வரிசையில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்தார். சென்னையில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க :சென்னை வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!