தமிழ்நாடு

tamil nadu

ரோகித், கில் சதம்.. வலுவான முன்னிலையுடன் இந்திய அணி!

By PTI

Published : Mar 8, 2024, 5:06 PM IST

India Vs England 5th Test match: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்து, 255 ரன்கள் முன்னிலை வகித்து வலுவான நிலையில் உள்ளது.

India vs England 5th test match
India vs England 5th test match

தர்மசாலா: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராலி களம் இறங்கினர். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இந்த கூட்டணியே சிறுதி நேரம் களத்தில் நிலைத்தது. 64 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென் டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது, இங்கிலாந்து அணி. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சு முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றயது. ஜாக் கிராலி 79, ஒலி போப் 11, ஜானி பேரிஸ்டோவ் 29, ஸ்டோக்ஸ் 0 என இங்கிலாந்து அணியின் மொத்த பேட்டிங் வரிசையையும் தனது சுழலுக்கு இரையாக்கினார், குல்தீப். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்களையும், அஷ்வின் 4 விக்கெட்களையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் முடிவிலேயே, இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது. ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் ரோகித் - கில் கூட்டணி இருந்தது.

இந்த நிலையில், இன்று போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ரோகித் - கில் கூட்டணியை பந்து வீச்சில் தேர்ந்த அண்டர்சனாலேயே வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் சதத்தை எட்டிய பின்னரே, களத்தில் இருந்து வெளியேறினர். சிறிது நேரம் பந்தை கையில் எடுக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், மதிய இடைவெளிக்குப் பிறகு கையில் எடுத்தார். ரோகித்தின் விக்கெட்டையும் வீழ்த்தி கூட்டணியை உடைத்தார்.

ரோகித் 103 ரன்களிலும், அதன்பின் கில் 110 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களம் கண்ட படிக்கல், சஃப்ராஸ் கான் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கண்டனர். இந்த முறை பசீர், இவர்களது கூட்டணியை பிரித்தார். படிக்கல் 65, சஃப்ராஸ் 56 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடந்து, ஜடேஜா மற்றும் துருவ் ஜூரல் 15, அஷ்வின் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தற்போது குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். 2வது நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 473 ரன்களைக் குவித்து, 255 ரன்கள் முன்னிலை வகித்து, வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில், அதிகபட்சமாக பசீர் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க:கபடி ஆண்களுக்கானது மட்டுமல்ல.. கபடி அணியின் முதல் பெண் உரிமையாளர் ராதா கபூர்!

ABOUT THE AUTHOR

...view details