தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு.. பலுசிஸ்தான் குண்டுவெடிப்பில் 30 பலி!

By PTI

Published : Feb 8, 2024, 12:14 PM IST

pakistan general election: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தேசிய சபைக்கும் 4 மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 12.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

pakistan general election polling start
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்

கராச்சி: பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலையற்ற தன்மை, வன்முறை போன்ற சூழலுக்கு மத்தியில் தேசிய சபைக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று (பிப்.8) காலை 8 மணிக்குத் துவங்கியத் தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் தேசிய சபை மொத்தம் 336 உறுப்பினர்களை கொண்டது. இதில் 266 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், அவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமரைத் தேர்வு செய்கின்றனர். பாகிஸ்தான் தேசிய சபை தேர்தலுடன் சிந்து, கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத் ஆகிய நான்கு மாகாண சட்டசபைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

பாகிஸ்தான் தேசிய சபை தேர்தலில் 12.85 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனிப்பெரும்பான்மை பெறும் என கருதப்படுகிறது.

இம்ரானின் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியதால் அவரது கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் காண்கின்றனர். முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் 4வது முறையாக பிரதமர் ஆகும் முனைப்புடன் உள்ளார். மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரியும் பிரதமருக்கான ரேசில் உள்ளார்.

பாகிஸ்தான் தேசிய சபைக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் நேற்று (பிப்.7) பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் அலுவலகங்களில் குண்டும் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசிய சபை தேர்தல் மற்றும் நான்கு மாகாண சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 17 ஆயிரத்து 816 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 16 ஆயிரத்து 930 பேர் ஆண்கள், 882 பெண்கள், 4 திருநங்கைகள் ஆவர். தேசிய சபைக்கு போட்டியிடும் 5 ஆயிரத்து 121 வேட்பாளர்களில் 4 ஆயிரத்து 807 பேர் ஆண்கள், 312 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள் ஆவர்.

தேர்தல் நாளுக்கு முன்னதாக நடந்த குண்டு வெடிப்பினால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுடனான எல்லையை பாகிஸ்தான் மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details