தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரிப்? ஆட்சியை கைப்பற்ற கட்சிகளுன் கூட்டணி பேச்சுவார்த்தை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 10:14 PM IST

Pakistan Elections Result: சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரிப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Etv Bharat
Etv Bharat

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு இம்ரான் கான் ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் கூட்டணி கட்சிகள் கைவிரித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கூட்டணி ஆட்சியை அமைத்தது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சியும் கவிழ்ந்தது.

பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து காபந்து அரசு அமைக்கப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (பிப். 8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாக பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 25க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இருப்பினும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களில் 5க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக நாடு முழுவதும் தொலைபேசி இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், காலை முதலே வாக்கு எண்ணிக்கையில், இம்ரான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் இணைய சேவை முடக்கம் காரணமாக தேர்தல் நிலவரம் முழுமையாக வெளிவராத நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முழு விவரம் தெரியவரவில்லை எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்த்தை கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரிப் திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக தனது சகோதரர் ஷெபாஸ் ஷெரிப்பை அனுப்பி மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு தான் தேர்தல் நடைபெற்று உள்ளது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 169 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது வரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :எம்.எஸ்.சுவாமிநாதனை போல் பாரத ரத்னா விருதுக்கு அவர் தகுதியானவர்: மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சுட்டிக்காட்டும் மற்றொருவர்!

ABOUT THE AUTHOR

...view details