தமிழ்நாடு

tamil nadu

22 தமிழக மீனவர்கள் கைது.. சிறைக்காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 8:41 PM IST

22 Fishermen arrest issue: காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு வருகின்ற 22ஆம் தேதி வரை சிறைக்காவல் விதித்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது

இலங்கை: காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்கு காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் 22 மீனவர்களுக்கும் வருகின்ற 22ஆம் தேதி வரை சிறைக் காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கை பார்க்கக் கூடாது.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைச் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர்களின் தண்டனையை ரத்து செய்யாத சிங்கள அரசு, இலங்கைச் சிறைகளில் சில வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களை விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்ததற்கு அடுத்த நாளே 22 மீனவர்களைச் சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாது.

இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

40 ஆண்டுகளாகத் தொடரும் சிங்களைக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறார் யூசுப் பதான்.. மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details