சென்னை:காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆய்வு தொடர்பாக அத்துறையின் இயக்குநர் கொரியன் ஜோசப் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வரும் காலத்தில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் எனவும், இதனால் விவசாயம் மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20100-ஆம் ஆண்டில் வெப்ப அலை 90 முதல் 120 நாட்கள் வீசும் எனவும், விவசாயம் பாதிக்கப்பட்டு உற்பத்தி 10 சதவீதத்திற்கு மேல் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 30 ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த 30 ஆண்டுகளில் 30 நாட்கள் மட்டுமே வெப்ப அலை வீசி உள்ளதாகவும், அதாவது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே வெப்ப அலை இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, தட்ப வெப்பநிலையின் மாற்றம் சுமார் 2 டிகிரி வரை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த தட்ப வெப்பநிலையை 1.5-ல் இருந்து 2- டிகிரிக்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பது உலக நாடுகளின் ஒப்பந்தம். ஆனால் அந்த ஒப்பந்தத்தை கடந்து தட்ப வெப்பநிலை அதிகரித்து வருகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், தட்ப வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்துள்ளதுதான். அதாவது, 1980ஆம் ஆண்டில் 270 பிபிஎம்-ஆக இருந்த கார்பன் டை ஆக்சைடு, தற்போது 430 பிபிஎம் ஆக அதிகரித்துள்ளது என கொரியன் ஜோசப் தெரிவித்தார்.