சென்னை: தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு, 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் 23 நபர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த மார்ச் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவில் ராதாரவி வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.
மொத்தமுள்ள 1,465 வாக்குகளில் 1,017 வாக்குகள் பதிவானது. அதில் ராதாரவி 662 வாக்குகளும், ராஜேந்திரன் 349 மற்றும் சற்குணராஜ் 36 வாக்குகளையும் பெற்றனர். அதேபோல், ராதாரவி அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக ராதாரவி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். நடக்க முடியாத நிலையிலும் வந்து, தனது தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக கதிரவன், பொருளாளராக ஷாஜிதா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். துணைத் தலைவர்களாக துர்கா சுந்தரராஜன், மாலா, மோகன் குமாரும் இணைச் செயலாளர்களாக எமி, குமரன், சதீஷ் குமார் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.