தமிழ்நாடு

tamil nadu

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு குவியும் பாராட்டு - நேரில் அழைத்து கமல்ஹாசன், உதயநிதி பாராட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 10:59 PM IST

manjummel boys: மலையாளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தின் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மஞ்சுமல் பாய்ஸ்  படக்குழு
மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு

சென்னை:2024ம் வருடம் ஆரம்பித்து இரண்டு மாதங்களான நிலையில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்கள் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரம்மயுகம், பிரேமலு படங்களை தொடர்ந்து வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மொழிகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 22ம் தேதி படம் வெளியான திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள‌ மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இன்னும் சில தினங்களில் படம் ரூ.100 கோடியை வசூல் செய்யும் என கூறுகின்றனர்.

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கிக்கொண்ட நண்பரை மீட்கப் போராடும் நண்பர்களின் கதைதான் மஞ்சுமல் பாய்ஸ். 17 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் மஞ்சுமல் பகுதியில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு அங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்த்துவிட்டு குணா குகைக்கு சென்றுள்ளனர்.‌

அங்கு இவர்களின் நண்பர்களின் ஒருவரான சுபாஷ் என்பவர் ஆழமான குகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு சிக்கியவர்கள் யாரும் உயிருடன் மீண்டதில்லை. ஆனால் சுபாஷ் உயிருடன் இருக்க அவரை எப்படி நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்பதே இப்படத்தின் கதை. 2006ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

படத்தில் ஒரு முக்கிய இடத்தில் வரும் குணா படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் மிகப் பெரிய கூஸ்பம்ப் மூவ்மெண்டாக மாறியுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எடுத்த அதே இடத்தில் தான் இப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செட் அமைக்கப்பட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் மிகப் பெரிய கமல் ரசிகர். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை எடுத்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி இருவரும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை வரவழைத்து பாராட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை அமைச்சர் உதயநிதி நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை அவரது எக்ஸ் தளத்தில், “மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக மஞ்சுமல் பாய்ஸ் - ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்" - பிரேமலு நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details