தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் ஆலை; வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 4:55 PM IST

Updated : Feb 29, 2024, 7:54 PM IST

Sterlite plant Thoothukudi: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஆலை காற்று மற்றும் நீர் மாசுபாடுச் சட்டங்களை நீண்ட காலமாக மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது.

இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, “ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறதா என்ற ஆய்வு நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தமிழ்நாடு அரசும், ஸ்டெர்லைட் ஆலை ஒப்புக் கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையைத் திறப்பதா, இல்லை வேண்டாமா என்பது தொடர்பாக முடிவுகள் செய்யலாம்” எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருந்தது.

இந்த நிலையில், இன்று (பிப்.29) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, காப்பர் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால், அப்பகுதியில் மாசு ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முறையாகக் கையாண்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை முடியது சரியான ஒன்று. மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அம்மாநிலத்தின் கடமை எனத் தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“ஒரு சிறு தவறு நடந்துவிட்டது”.. சீன கொடி விவகாரத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Last Updated :Feb 29, 2024, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details