ETV Bharat / state

“ஒரு சிறு தவறு நடந்துவிட்டது”.. சீன கொடி விவகாரத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 5:24 PM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
விளம்பரத்தில் சீன தேசியக் கொடி இருந்தது தெரியாமல் நடந்த தவறு

Chinese flag in rocket launch pad: குலசேகரன்பட்டினம் பகுதியில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளம் குறித்து நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சிறு தவறு நடந்துவிட்டது என தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

விளம்பரத்தில் சீன தேசியக் கொடி இருந்தது தெரியாமல் நடந்த தவறு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் பகுதியில் அமைய உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் 2வது ராக்கெட் ஏவுதளம் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரத்தில் இடம்பெற்ற ராக்கெட்டில், சீன கொடி அச்சிடப்பட்டு இருந்தது தெரியாமல் நடந்த சிறு தவறு, அது வேறு எந்த நோக்கத்துடனும் செய்யப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, என் மன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று, பின் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனத்தின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் பகுதியில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான விளம்பரத்தை நாளிதழில் போட்டதில், சீன கொடியுடன் அச்சிடப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (பிப்.29) செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், சீன அடையாளக் கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. இது தெரியாமல் நடந்த தவறு, அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று உள்ளது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு அரசு விழாவில் திட்டத்தையும், பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களை பற்றியும் பேசுவார்களே தவிர, அரசியல் பிரச்சாரம் பேச மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது, நமது நாட்டின் பிரதமர் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. அடிப்படை தெரியாமல் இருக்கின்றனர். வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது” என கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி: ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.