தமிழ்நாடு

tamil nadu

உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம் - முக்கிய விவசாய பிரமுகர்களுக்கு வீட்டுக்காவல்? - டெல்லி சலோ போராட்டத்தின் அடுத்தடுத்த நகர்வுகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:38 PM IST

Punjab Farmers Protest: கிசான் அந்தோலனுடன் தொடர்புடைய அமைப்புகளின் தலைமை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க ஹரியானா போலீசார் முடிவு செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Punjab Farmers Protest
கிசான் அந்தோலன்

சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் - ஹரியான எல்லையில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கிசான் அந்தோலனுடன் தொடர்புடைய அமைப்புகளின் தலைமை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க, ஹரியானா போலீசார் முடிவு செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்பாலா போலீசார் கூறியதாவது, "கடந்த பிப்.13ஆம் தேதி முதல் விவசாயிகளின் ’டெல்லி சலோ' அணிவகுப்பு தொடர்பாக, சம்பு பகுதியில் உள்ள தடுப்புகளை உடைக்க விவசாய அமைப்புகள் முயற்சி செய்கின்றனர். மேலும், போலீசார் மீது கற்களை வீசி கலவரத்தை உருவாக்குவதன் மூலம், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கள் சேதமடைந்தன. 30க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 2 போலீசார் உயிரிழந்தனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பல விவசாயத் தலைவர்கள் இதில் செயல்படுகின்றனர்" என்று கூறினார்.

மேலும், “பேஸ்புக், வாட்ஸ் ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஆவேசப் பேச்சுகளை பேசுகின்றனர். குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், தேசியப் பாதுகாப்பு சட்டம் 2(3) பிரிவின் கீழ் விவசாய அமைப்புகளின் அதிகாரிகளை வீட்டுக்காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் யாருக்கேனும் உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்பட்டால் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்" என போலீசார் கூறினார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் கடந்த பிப்.21ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், சுப்கரன் சிங் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் இன்று (பிப்.23) அறிவித்துள்ளார். முன்னதாக, 4 கட்டங்களாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போதும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதையும் படிங்க:காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு சுமூகம்? யாராருக்கு எத்தனை தொகுதிகள்?

ABOUT THE AUTHOR

...view details