இந்தூர்:மத்தியப் பிரதேச மாநிலத்தில் நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் எஞ்சிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில், இந்திய கூட்டணி சார்பில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலம், கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் சங்கர் லால்வானியும், காங்கிரஸ் சார்பில் அக்சய் கண்டி பாம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் கண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். மேலும் அவர் பாஜகவில் இணைந்தாக கூறப்படுகிறது. பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் மெண்டோலா மற்றும் இந்தூர் தொகுதி சிட்டிங் எம்.பி சங்கர் லல்வனி ஆகியோருடம் அக்சய் கண்டி பாம் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பான தகவலை மத்திய பிரதேச அமைச்சரும், பாஜக தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பாஜகவிற்கு வரவேற்கிறோம். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, முதலமைச்சர் மோகன் யாதவ், மற்றும் மாநில பாஜக தலைவர் விடி சர்மா ஆகியோர் தலைமையில் பணியாற்ற இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீஅக்சய் கண்டி பாம் அவர்களை பாஜகவிற்கு வரவேற்கிறோம்" என்று பதிவிட்டு உள்ளார்.
அக்சய் கண்டி பாமில் திடீர் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, இந்தியா கூட்டணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதைத் தொர்ந்து பகுஜான் சமாஜ், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதனால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் திடீரென தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் ஐக்கியமானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் சிக்கிய பாகிஸ்தான் படகு! 14 பேர் கைது! - Gujarat Pakistan Drug Boat Seized