டெல்லி:மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா, உணவு களஞ்சியம் என்ற மற்றொரு பெயருடன் வீரநடையிட்டு வருகிறது. உணவு களஞ்சியமாக இயங்கும் தற்போதைய இந்தியா ஒரு காலத்தில் பட்டினி மற்றும் பஞ்சத்தில் தவித்ததை யாராலும் மறுக்க முடியாத உண்மையே. அந்த தவிப்பில் இருந்து இந்தியா மீண்ட யுக்திகள், அதற்கான காரணம் என வாய் திறந்தால், அந்த முயற்சிகளில் எம்.எஸ். சுவாமிநாதனின் பங்கு மறக்கவும் மறுக்கவும் முடியாதவை.
யார் இந்த சுவாமிநாதன்.. அப்படி என்ன செய்துவிட்டார் இவரைக் கொண்டாட..?: பொதுவாக நம் நாட்டில் ஒரு கவனிக்கதக்க பழக்கம் உண்டு. அதாவது அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய உயிரினங்களை பாதுகாக்க அதனை தேசிய சின்னமாகவோ அல்லது அளப்பறிக்கும் குறியாக மாற்றுவர். அந்த வகையில் பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சுதந்திர இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருந்தது விவசாயம். மக்களின் பசிக்கும், பஞ்சத்திற்கும் வழி தெரியாமல் ஓரம் நின்றனர் தலைவர்கள்.
அந்த காலகட்டத்தில் நாட்டு மக்களின் பஞ்சத்தை தன் தோளில் சுமந்தவர் தான் இந்த எம்.எஸ். சுவாமிநாதன். இன்றளவும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளில் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும், தீர்க்கத்தையும் பெற்ற புரட்சி என்றால் அது எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமை புரட்சியே.
மக்களின் பட்டினியை மட்டுமின்றி, தொலைநோக்கு விவசாயத்தையும் முன்னெடுத்தவர் என்றே பெருமை சாடலாம். இவருக்கும் டெல்லியிலுள்ள ஜாண்டி கிராமத்திற்குமான தொடர்பு கேட்போரை உணர்ச்சியடைய செய்வதில் தவறியதில்லை. ஒரு கட்டத்தில் இந்தியாவில் விவசாயத்தை மறுக்கத் துவங்கிய விவசாயிகளை அவரது பலமான யோசனைகளுடன் கைகோர்க்க வலியுறுத்தினார்.