புத்தாண்டையொட்டி அழியார் கவியருவியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்..! தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 5:29 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அழியார் கவியருவி தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதி என்பதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.

இதனையடுத்து இன்று பள்ளிகள் விடுமுறை என்பதாலும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கவியருவியில் குளிப்பதற்காகக் காலை முதலே குவிந்து ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சில பயணிகள் பொள்ளாச்சி வால்பாறை மலைப்பாதை சாலை வழியாக வருகை தருகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள், பாக்கு தட்டுகள் போன்ற பொருட்களைச் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் வீசி செல்வதால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து தற்போது வரை அங்குத் தடுப்புகள் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படவில்லை.

இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளித்து வருகின்றனர். புத்தாண்டு தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என வனத்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.