"தற்காப்புக்காகவே போலீசார் சஞ்சய் ராஜாவை சுட்டனர்" - துணை ஆணையர் சந்தீஸ் பேட்டி!

By

Published : Mar 7, 2023, 7:16 PM IST

thumbnail

கோவை: கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி சஞ்சய் ராஜா, போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய் ராஜாவை போலீசார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். சஞ்சய் ராஜா காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் ஆய்வு செய்தார்.  

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இன்று(மார்ச்.7) காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனிப்படையினர் இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய் ராஜாவிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே, ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்காகவே இங்கே அழைத்து வந்திந்தனர்.  

சரவணம்பட்டி பகுதியில்தான் சஞ்சய் ராஜா தங்கி இருப்பார். இந்தப் பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர். அந்த துப்பாக்கி நாட்டுத் துப்பாக்கியை போல இருக்கிறது. மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுடத் தொடங்கிவிட்டார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் பத்து நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதில் நல்வாய்ப்பாக போலீசார் தப்பிவிட்டனர். சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறன்றன. துப்பாக்கி எங்கு வாங்கினார்? என்பது குறித்து விசாரித்த பொழுது பீகார், ஒடிஷா என சொல்லி இருக்கின்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.  

கோவையில் துப்பாக்கி கலாசாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கின்றார். சஞ்சய் சுட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கியைப் போலவே இருக்கிறது, இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்" என்று கூறினார்.  

இதையும் படிங்க: போலீசார் மீது துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் உயிர் தப்பிய போலீஸ்.. கோவையில் திக்.. திக்.. சம்பவம்..!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.