தூத்துக்குடியில் போலி பத்திரங்கள், போலி அரசு முத்திரைகள் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது!

By

Published : Mar 28, 2023, 1:39 PM IST

thumbnail

தூத்துக்குடி: இந்திரா நகரைச் சேர்ந்தவர், மாரியப்பன் மகன் வண்டி தேவன் (வயது 64). இவர், தனது உறவினரான காசிராஜன் என்பவரின் வீட்டுப் பத்திரம் தவறிவிட்டதாகவும், அதற்காக புதிய பத்திரம் வாங்க வேண்டும் என்றும், புதியம்புத்தூர் பவுண்டு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்ராஜ் (வயது 66), என்பவரிடம் கூறினாராம். 

அதற்கு பொன்ராஜ் ரூ.30,000 கொடுத்தால் புதிய பத்திரம் வாங்கி தருகிறேன் என்று கூறவே, வண்டி தேவனும் ரூ.30,000 கொடுத்துள்ளாராம். அதன் பின், தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த சுந்தர் மகன் அசோகன் (வயது 65) என்பவரிடம், பொன்ராஜ் வண்டி தேவனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அசோகன் என்பவர் தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே கடை ஒன்று வைத்துள்ளார். அங்கு, அசோகன் வண்டி தேவனைச் சந்தித்து பத்திரம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பத்திரத்தை வண்டித்தேவன், ஒட்டப்பிடாரம் பத்திர அலுவலகத்தில் சென்று சரிபார்த்த போது, அந்த பத்திரத்தில் போலி கையெழுத்து மற்றும் போலி முத்திரைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

எனவே, இதுகுறித்து வண்டிதேவன், தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அசோகனை கைது செய்தார். மேலும், அவரது கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியதில், அரசு முத்திரையுடன் 80-க்கும் மேற்பட்ட ரப்பர் ஸ்டாம்ப்புகளும் மேலும், மூடை மூடையாக ஆவணம் பத்திரங்களும் இருப்பது தெரியவந்தது.

இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அசோகன், பொன்ராஜ், மறவன் மடத்தைச் சேர்ந்த ராஜதுரை, அவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 56), தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த டேவிட் மகன் இம்மானுவேல் (வயது 59), ரகமத்துல்லா புரம் முனியசாமி மதன் காளீஸ்வரன் (வயது 61) ஆகிய 5பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெருங்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மூவர் நீதிமன்றத்தில் சரண்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.