கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிங்க.. பீகாரை திரும்பி பாருங்க சார்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

By

Published : Jun 7, 2023, 1:01 PM IST

thumbnail

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பின் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசியது, "தமிழக முதலமைச்சர் 2 ஆண்டுகளில் ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.  

உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க 'நான் முதல்வன்' திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். 'நான் முதல்வர்' திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கல்வித் தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் பேசிய அவர், ஆளுநர் குறைந்தபட்சம் செய்தித்தாளையாவது படிக்க வேண்டும். அரசியல் வாதி போன்றும், எதிர்க்கட்சி போன்றும் பேசுவது வருந்தத்தக்கது. ஆளுநர் ஊட்டிக்குத் துணை வேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகச் சென்றிருக்கிறார். அதற்கு அவர் தனியாகச் சென்றிருக்கலாம். தமிழ்நாட்டில் எப்படி கல்வி வளர்ச்சி தரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார். 

தற்போது வரை அவர் எத்தனை கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கல்வியிலேயே அரசியலைப் புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இரு மொழிக்கொள்கை தான், ஆளுநர் இருந்த மாநிலத்தில் தாய்மொழியையே சரியாகப் படிக்காதவர்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தில் எப்படி கல்வித் தரம் உள்ளது என்பதை அவர் பார்க்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை, அதனால் தான் ஆளுநர் மூலமாகக் கொண்டு வருவதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். தொழிற்சாலை பெருக வேண்டும் என்பதால் தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு இங்குள்ள சூழல் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர் பயணம் மேற்கொண்டார். 

இதையெல்லாம் பாராட்டவில்லை என்றாலும், இதை அரசியல் செய்வார் என எதிர்பார்க்கவில்லை. மேலும் சென்னையில் வெப்பம் அதிகமாக உள்ளது எனவும், ஊட்டியில் குளிர் இருப்பதால் ஆளுநர் அங்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது" என்று விமர்சித்தார். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.