கந்த சஷ்டி; தேனி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் சூரனை வதம் செய்த பாலசுப்பிரமணியர்!
தேனி: பெரியகுளத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்ட பல நூற்றாண்டு கண்ட அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணியருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
இந்நிலையில், நேற்று காலை பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் மாலை உற்சவர் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி நகர் வலமும் நடைபெற்றது.
இதில் முருகப்பெருமான் திருவள்ளுவா் சிலை, பெருமாள் கோயில், தெற்கு அக்ரஹாரம், சங்கு ஊதும் இடம் உள்ளிட்ட பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சாலையில் இருபுறங்களும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா என சரண கோஷங்களை எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர். அதன் பி,ன் வேலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.