விவசாயத்தை ஊக்கப்படுத்த மாட்டுவண்டியில் ஊர்வலம் வந்த புதுமண தம்பதிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:51 PM IST

thumbnail

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ பட்டயப்படிப்பு முடித்துள்ளார். மோகன்ராஜ் பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தாலும் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கலையரசிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகளை அவரது வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார்.

செந்தாமரைவிளை பகுதிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் ஊர்வலமாக, செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் காயாமொழியிலுள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர். அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்படுத்தினார். மணமகன் மக்கள் விவசாயத்திற்கு இயந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாக கூறினார்.

மேலும் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டுவண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.