ETV Bharat / sukhibhava

டீன் ஏஜ் குழந்தைகள் மிக ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்? பெற்றோர் அதை எப்படி கையாள வேண்டும்.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 5:51 PM IST

வீட்டில் இருக்கம் டீன் ஏஜ் குழந்தைகள் பல நேரங்களில் பெற்றோர்களிடம் மிக ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள். இது அவர்கள் வேண்டும் என்றே செய்யும் செயல், ஒழுக்கம் அற்ற குணம், பிடிவாதம் என்று பல கோணங்களில் பார்க்கிறோம். ஆனால் உளவியல் ரீதியாக மருத்துவர்கள் சொல்லும் தகவல் முற்றிலும் வேறுபட்டு உள்ளது. என்ன என்பதைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: டீன் ஏஜ் குழந்தைகள் அல்லது தமிழில் பதின் பருவத்தினர் என்ற பட்டியலுக்குள் வரும் குழந்தைகள் 13 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள், பல நேரங்களில் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் கோபம் கொண்டு ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். சிலர் வாழ்க்கையையே இழந்ததுபோன்று அழுது புலம்பி தள்ளி விடுவார்கள்.

பல நேரங்களில் துரதிருஷ்டவசமாக டீன் ஏஜ் குழந்தைகளில் சிலர் கோவத்தில் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான மன நிலையைக்கூட அடைகிறார்கள். இது எதனால்? இதற்கு முக்கியக் காரணம் என்ன? என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது குறித்து மருத்துவர்களும், மருத்துவ ஆய்வுகளும் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இது குறித்து Child Mind Institute என்ற இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து எழுதியுள்ள மருத்துவர் ரே ஜேகப்சன், அந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக விவரித்துள்ளார்.

1. பதின் வயதினர் ஏன் கோபப்படுகிறார்கள்?

2. அவர்களுக்குப் பெற்றோர் எப்படி உதவ வேண்டும்?

3.அவர்களைப் பற்றி நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும்?

பதின் பருவத்தினரின் அன்றாட வாழ்க்கை என்பது முட்டை ஓட்டின் மீது உடையாமல் அவர்களை நடக்கச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது எனக்கூறுகிறார் மருத்துவர் ரே ஜேகப்சன். பதின் பருவத்தினர் குழந்தைகளா? எனக் கேட்டால் இல்லை.. சரி பெரியவர் ஆகி விட்டார்களா? எனக் கேட்டால் அதுவும் இல்லை. அவர்கள் யார் என்றால்? அதற்கு மருத்துவர் ரே ஜேகப்சன், கூறும் பதில் பெரியவர் ஆகிக்கொண்டு இருக்கும் சிறியவர் என விளக்கம் அளிக்கிறார்.

இந்த பருவத்தில் அவர்கள் உடல் மற்றும் மனநிலை என அனைத்திலும் பெரிய அளவில் மாற்றம் நடைபெறும். உடலில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் புது புது மனநிலையை உருவாக்கும். இந்த பருவத்தில்தான் மீசை முளைக்கும், இந்த பருவத்தில்தான் காதல் வரும், இந்த பருவத்தில்தான் மறைமுகமான விஷயங்கள் மீது தேடல் வரும், இந்த வயதில்தான் பெண் குழந்தைகள் பூப்படைவார்கள்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் மாற்றம் ஏற்படும் தருணத்தில்தான் அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, எதிர் காலத்தைத் திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இதுபோன்ற தருணத்தில் பதின் பருவத்தினர் தங்கள் இயலாமை, ஏக்கம், தேவை மற்றும் தேடல்களை எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரியாமலும், யாரிடம் சொல்வது எனப் புரியாமலும் குழப்பம் அடைகிறார்கள்.

அச்சம் கொள்கிறார்கள். இதனால் மனதில் தேங்கும் அழுத்தம் வீட்டில் உள்ளவர்களிடம் வெளிப்படும். ஏன் என்றால் வீட்டில் உள்ளவர்கள் தங்களை விட்டுச் செல்ல மாட்டார்கள், தனது வீடு தனது பெற்றோர் என்ற உள் உணர்வு அவர்களின் கோவத்தை வீட்டில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

அப்போது பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது கோபம் கொள்ளுதல், அடித்தல், துன்புறுத்துதல், கடினமான வார்த்தைகளைக் கொண்டு திட்டுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது முற்றிலும் தவறான செயல் என்கிறார் மருத்துவர் ரே ஜேகப்சன்.

உங்கள் குழந்தைகள் பச்சிளம் குழந்தையாக இருக்கும்போது காரணம் இல்லாமலே அழுவார்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். பசியில் அழுதால் பால் கொடுத்திருப்பீர்கள், துணியை ஈரம் செய்திருந்தால் அதை மாற்றி விடுவீர்கள்.

அப்போது அவர்கள் சொல்லாமலே அவர்களின் தேவையை அறிந்து செய்த பெற்றோர், உங்கள் குழந்தை பதின் பருவத்தில் கோபம் கொள்ளும்போது மட்டும் திருப்பி கோபம் கொள்வது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் உங்கள் குழந்தையின் கோவத்திற்குப் பின்னால் அவர்களுக்கான தேவை அல்லது கவலை ஏதேனும் இருக்கலாம். அதைத் தெரிந்துகொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை என்கிறார் மருத்துவர் ரே ஜேகப்சன்.

பதின் பருவத்தினரை எப்படிக் கையாள வேண்டும்: உங்கள் குழந்தை வீட்டில் வந்து கோபம் கொள்கிறது அல்லது ஆக்ரோஷம் அடைகிறது என்றால் அதை அனுமதியுங்கள். அதன் மூலம் உங்கள் குழந்தையின் மனதில் இருக்கும் அழுத்தம் கொஞ்சம் குறையும். மேலும், அவர்கள் ஆக்ரோஷப்படும்போது நீங்களும் திருப்பிக் கோபம் கோண்டு பேசக்கூடாது, அந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும்.

அவர்களின் கோபத்தை வீட்டில் காண்பிக்கும்வரை உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் கோபத்தை நீங்கள் சரியாகக் கையாளவில்லை என்றால், அது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் குழந்தை கோபம் கொள்கிறது, ஆக்ரோஷப்படுகிறது என்றால் அந்த நேரத்தில் அமைதி காத்துவிட்டு, ஒரு சூழலில் அவர்களை அன்பாக அழைத்து... "அம்மா இருக்கிறேன் அல்லது அப்பா இருக்கிறேன்.. உனது தேவை மற்றும் ஆசைகளை நிறைவேற்றவும், உன்னைப் பாதுகாப்பதும் அன்பு செய்வதும்தான் என் முதல் பணி. உனக்கு நான் முதலின் ஒரு நண்பன் அல்லது தோழி, என்னிடத்தில் நீ எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதை வைத்து நான் உன்னைக் கனிக்க மாட்டேன்" எனக்கூறி அவர்களின் மனதில் இருக்கும் கவலையைக் கேட்டுத் தெரிந்து அதைச் சரி செய்ய வேண்டும்.

அது சில நேரங்களில் உள்ளுக்குள் உங்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும் பிரச்சனையாக இருக்கலாம், அல்லது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் குழந்தைகளை உங்கள் அனுபவத்தில் இருந்து பார்க்காமல்.. அவர்களின் அனுபவத்தில் இருந்து பார்க்க வேண்டும். அவர்களது பிரச்சனை அவர்களுக்குப் பெரிதாகத் தெரியலாம். அதை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் திணறி நிற்கலாம்.

அந்த நேரத்தில்தான் உங்கள் குழந்தைக்கு உங்கள் உதவி தேவைப்படும். அது காதல் விவகாரமாக இருக்கலாம் அல்லது பாலியல் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம், அல்லது மது மற்றும் புகையிலை பயன்படுத்துவது தொடர்பாக இருக்கலாம், அல்லது எனது நண்பர்கள் பைக் வைத்திருக்கிறார்கள் எனக்கும் பைக் வேண்டும், அல்லது காஸ்டிலியான ஃபோன் வேண்டும் என்ற பிடிவாதமாகக்கூட இருக்கலாம். அது அவர்களின் தேவை அல்ல, ஆனால் அது அவர்களின் சுய மரியாதைபோல நினைத்துக் கேட்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் பொறுமை காத்து, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

கத்தியில் நடப்பதுபோன்ற இந்த பதின் பருவத்தைத் தாண்டுவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால் பெற்றோர் தங்களின் அனுபவம் மற்றும் பக்குவத்துடன் குழந்தைகளைக் கையாண்டு அவர்களைப் பாதுகாத்து எதிர்காலத்தைச் செம்மைப் படுத்த வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என மருத்துவர் ரே ஜேகப்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனால் புற்றுநோயா?... பெற்றோர்களே உஷார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.