ETV Bharat / sukhibhava

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன? பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

author img

By

Published : Jun 8, 2023, 3:16 PM IST

Updated : Jun 8, 2023, 7:28 PM IST

பெண்கள் மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் உடல் உபாதைகளை வைத்தே அவர்களுக்கு ஏற்படும் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய முடியும் என மருத்துவர் விஷேஷ் கஸ்லிவால் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: பெண்கள் பருவமடைந்தது முதல் சுமார் 50 வயது வரை 'மாதவிடாய் சுழற்சி'-யை (Menstrual cycle) எதிர்கொள்கின்றனர். அவர்களின் ஆரோக்கியம், இனப்பெருக்கத்திற்கான திறன் உள்பட பெண்களின் ஒட்டு மொத்த வாழ்கையும் இந்த மாதவிடாய் சுழற்சியை சுற்றி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் பெண்களில் பலருக்கு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி மற்றும் அதற்கான காலம் குறித்து போதுமான புரிதல் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் இது குறித்து பெண்கள் முழுமையாக தெரிந்துகொண்டால் அவர்களின் எதிர்கால வாழ்கை சிறப்பாக அமைவதுடன் குழந்தையின்மை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்கிறார் மருத்துவர் விஷேஷ் கஸ்லிவால் இதுகுறித்து அவர் கூறிய அறிவுரைகளை விரிவாக அறிந்துக்கொள்வோம்.

வழக்கமான மாதவிடாய் சுழற்சி: பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை இருக்கலாம். இந்த சுழற்சி பெண்ணுக்கு பெண் மாறுபடும். ஆனால் ஒரு பெண்ணுக்கு 21 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருகிறது என்றால் அதேபோல் அடுத்த மாதமும் 21 நாட்களில் மாதவிடாய் வரவேண்டும்.

ஆனால் சில பெண்களுக்கு ஒருமுறை 21 நாள், அடுத்த மாதம் 30 நாள் என மாறி மாறி மாதவிடாய் வருகிறது என்றால் அதை ஆரோக்கியமான மாதவிடாய் எனக்கூற முடியாது. பொதுவாக மன அழுத்தம், ஹார்மோன்களில் மாற்றம், வேறு ஏதேனும் உடல்நல கோளாறுகள் இருந்தால் இதுபோன்ற ஆரோக்கியம் அற்ற மாதவிடாய் வரலாம். இதுபோன்ற சூழல் ஏற்படும்போது பெண்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கமான மாதவிடாய் நாட்கள்: மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்பது இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இருக்கலாம். அதேபோல உதிரப்போக்கின் அளவும் பெண்ணுக்கு பெண் மாறுபாடுடன்தான் இருக்கும். ஆனால் ஏழு நாட்களுக்கு மேலோ அல்லது அதிகப்படியான உதிரப்போக்கோ இருந்தால் அவர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உள்ளிட்ட அடிப்படையான சுகாதார பிரச்சனையாக இருக்கலாம். இதை பெண்கள் ஆரம்பத்திலேயே சரி செய்து விட்டால் ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாயின்போது அசாதாரண வலி: பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின்போது இடுப்பு, வயிற்றின் அடிப்பகுதி, கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களில் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால் தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கிறது, தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்றால் அதை சாதாரணமாக கடந்துபோக முடியாது. இதுபோன்ற தாங்க முடியாத வலியை சந்திக்கும் பெண்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை காலண்டரிலோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். ஒரு மாதம் மாதவிடாய் ஏற்பட்ட காலத்திற்கும் அடுத்த மாதம் மாதவிடாய் ஏற்பட்ட காலத்திற்கும் இடையே மாற்றங்கள் உள்ளதா என்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது அவை வேறு ஏதேனும் உடல் உபாதைக்கு உண்டான அறிகுறியாக இருக்கலாம். அதனால், பெண்கள் இப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மனநிலை மற்றும் ஆற்றல் திறனில் மாற்றம்: மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களின் மனநிலை மற்றும் ஆற்றல் திறனில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த சூழலை சாதாரணமாக கடந்து செல்லும் பெண்கள் உண்டு. ஆனால் சில பெண்களுக்கு அதிகப்படியான உடல் சோர்வு, மனநிலையில் மாற்றம், சோகம், படபடப்பு, கோவம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றுசேர வரும் இதை (Premenstrual Dysphoric Disorder - PMDD) ப்ரீமேன்ஸ்ட்ருல் டயஸ்போரிக் டிசோர்டர் என மருத்துவ ரீதியில் குறிப்பிடுவார்கள். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அந்த பெண் கட்டாயம் மருத்துவரை அணுகி போதிய ஆலோசனை பெற வேண்டும்.

முடிவில் பெண்கள் ஆரோக்கியமாக வாழ மாதவிடாய் சுழற்சி மற்றும் அதன் அறிகுறிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவர்களுக்கான அறிவுறை. வழக்கமான மாதவிடாய் சுழற்சி, சாதாரண உதிரப்போக்கு, குறைந்த வலி மற்றும் அசௌகரியம், சீரான சுழற்சி நாட்கள், நிதானமான மனநிலை மற்றும் உடல் ஆற்றல் இவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒரு பெண் கருத்தரிப்பதில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்காது. இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: புதிய காதலியிடம் நல்ல பேரு எடுக்க இதை எல்லாம் செய்யாதீங்க..!

Last Updated : Jun 8, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.