ETV Bharat / state

கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

author img

By

Published : Aug 24, 2020, 5:40 PM IST

விருதுநகர்: கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை சாலையில் வீசி திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் ஒப்படைப்பு
கிராம மக்கள் ஒப்படைப்பு

விருதுநகர் அருகே பாவாலி பகுதியில் எல்கைபட்டியில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. குடியிருப்புகள் அருகில் இயங்கி வரும் இந்தக் கல் குவாரியில் வெடி வைக்கும்போது, கற்கள் சிதறி வீடுகளின் அருகில் வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்குள் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், இந்த குவாரியில் இருந்து அருகில் உள்ள எல்கைப்பட்டி கிராம குடியிருப்புகள் சுமார் 150 மீட்டர் தூரத்திற்குள் உள்ளது. அதிக சக்தியுள்ள வெடிகளை குவாரியில் வெடிக்கும்போது அங்குள்ள வீடுகளில் அதிர்வினால் வெடிப்பு ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள், இதய நோயாளிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவெடிக்கும்போது பறக்கும் கற்கள் கிராமத்திற்குள் வந்து விழுந்து கிராம மக்களுக்கு அடிக்கடி காயங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, வெடி பொருட்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீருடன் கலந்து விஷமாகி உள்ளது. மேலும் இரவு முழுவதும் கிரஷர் இயங்குவதால் இரைச்சலின் காரணமாக கிராம மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அதிக தூசியின் காரணமாக சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் குவாரியை மூட உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த எல்கைப்பட்டி கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை சாலையில் வீசி, திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.