ETV Bharat / state

'பட்டாசு ஆலைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்'

author img

By

Published : Feb 14, 2021, 5:17 PM IST

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து தவிர்ப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்க கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

Fire
Fire

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து தவிர்ப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்க கடைபிடிக்க வேண்டியவைகள்

பட்டாசு ஆலைகளில் அரசு அனுமதி பெற்றுள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தாங்கள் தொழில் நடத்த வசதி வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் மற்றவர்களுக்கு குத்தகைக்கு பட்டாசு ஆலையை விடுகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைத்திட வேண்டும்

ஆனால் சில சமயங்களில் ஒரே பட்டாசு ஆலையை உள்வாடகைக்கு விடுவது போன்று பல நபர்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் குத்தகைக்கு விடும்பொழுது குத்தகைதாரர்கள் லாபம் பார்ப்பதற்காக நேரம் கணக்கீடு செய்யாமலும் குறிப்பிட்ட ஆட்களை கணக்கில் கொள்ளாமலும் அதிகப்படியான ஆட்களை வைத்து குறைவான இடங்களில் நெருக்கடியாக தொழில் செய்வதாலும் மருந்துகளை சரியான அளவீடுகளில் கலங்காமலும் கலவை செய்த மருந்துகளை மீதம் வைத்து மீண்டும் உபயோகப்படுத்தும்போது அனுபவம் இல்லாத நபர்களை கொண்டு வேலை பார்ப்பதாலும் தடை செய்யப்பட்ட வெடி மருந்துகளை பயன்படுத்துவதால் பட்டாசு வெடி விபத்து ஏற்படுகிறது.

அரசு இதை கவனத்தில் கொண்டு பட்டாசு ஆலைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை விதிகளை பின்பற்றி பணி நடைபெறுகிறது என்பதையும் பட்டாசு தொழில் கண்காணிப்பு துறை என்று வருவாய் துறை, காவல் துறை, வெடிபொருள் பாதுகாப்பு துறை என சுமார் 5 துறைகள் இருக்கும்பட்சத்தில் சரியான முறையில் முறையாக பின்பற்றி கண்காணித்து வரும்போது பட்டாசு ஆலை நடத்துபவர்களும் விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகள் ஏற்படுவதை முடிந்தவரையில் குறைக்க முடியும் என்று பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தெரிவிக்கிறார்.


பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

பட்டாசு ஆலை செயல்பாடை அரசு கண்காணிக்க வேண்டும்

பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவதால் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படுகிறது. வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பல முறை எச்சரித்தும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

வெடிமருந்து கலவைகள் வெப்பத்திற்கு ஆகாதவை எனவே பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய வெடிமருந்து கலவையை வெயில் அதிகம் ஆகும் முன்பு காலையில் குளிர்ந்த நேரத்திற்கு உள்ளேயே அதாவது காலை 10 மணிக்குள் தயாரித்து முடித்துவிட வேண்டும். இந்தக் கலவையை பட்டாசில் செலுத்துவதற்கு பயன்படுத்தும்போது அதில் உள்ள ஈரம் உணரும் முன்னரே பயன்படுத்தி முடித்துவிடவேண்டும்.

மேலும் தட்ப வெப்பநிலை ஈரப்பதம் வெப்பச்சலனம் ஆகியவை உள்ளதால் பட்டாசு உற்பத்தி செய்வதில் விரைவாக செயல்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். உரிமங்கள் கொடுக்கப்பட்ட அளவீடுகளுக்கு உகந்தவாறு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது அவ்வாறு தயாரிக்கும்போது இட பற்றாக்குறை நெருக்கடி இதனால் மிகவும் ஆபத்து ஏற்படும்.

மேலும் பட்டாசு ஆலைகளில் மருந்து அலசுதல், செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை அதற்கான குறிப்பிட்ட அறைகளில் மட்டுமே வைத்து தயார் செய்ய வேண்டும். செந்தூரம், ஆண்டிமணி, ஆர்சனிக் போன்ற தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது.

முக்கியமாக பட்டாசு ஆலைகளில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளில் முறையான இடைவெளியில் கட்டப்பட்ட கட்டடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத அங்கீகரிக்கப்படாத தகர கொட்டைகளை உருவாக்கி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடக்கூடாது.

மழைக்காலங்களில் இடி, மின்னல் காரணமாக விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக ஆலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இடி தாங்கிகளை அடிக்கடி சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்புகளை குறிப்பிட்டுள்ள அந்தந்த அறைகளில் மட்டுமே தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெட்ட வெளியிலோ மரத்தடிகளிலோ எந்த வேலையும் செய்யக்கூடாது.

அனுபவம் மற்றும் தேர்ச்சி பெற்ற பணியாளர்களை மருந்து அலசுதல், செலுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். அதிகமான தயாரிப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனுபவம் இல்லாதவர்களையோ சிறியவர்களையோ பயன்படுத்துதல் ஆபத்தினை விளைவிக்கும். பட்டாசு ஆலைகளில் மது, சிகரெட் போன்ற தேவையில்லாத ஆபத்தை தரக்கூடிய விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அன்றாட தேவைகளுக்கு மட்டுமே மருந்து கலவையை தயாரிக்க வேண்டும்.

மருந்துகளை மீதம் வைக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கருப்பு மணி, கலர் மணி உலர்த்துதலை ஒழுங்குபடுத்தி கவனமுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் சரியாகவும் சுய கட்டுப்பாட்டுடன் பின்பற்றப்பட்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை சார்பில் பலமுறை பட்டாசு விபத்து தடுப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதையும் மீறி வெடி விபத்துகள் நடைபெறுவது வேதனைக்குரியது. இனி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்யும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தும் அதில் பலியானோரின் விவரங்களும் பின்வருமாறு:

  1. 2005ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.
  2. 2009ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
  3. 2009ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நமஸ்கரிச்சன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர்.
  4. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  5. 2016ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 11க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
  6. 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி சிவகாசியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலரும் தீ காயம் அடைந்தனர்.
  7. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
  8. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  9. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
  10. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி சிப்பிபாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
  11. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள கட்டுமன்னார் கோயிலில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் 7 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.
  12. 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.
  13. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலை விபத்தை தடுக்க அதிமுக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? திமுக செய்தித் தொடர்பாளர் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.