ETV Bharat / state

'ஜெனோம் சீக்வென்ஸிங்' ஆய்வகம் தமிழ்நாட்டில் வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்.பி.

author img

By

Published : Jun 8, 2021, 7:23 AM IST

'ஜெனோம் சீக்வென்ஸிங்' செய்வதற்கான ஆய்வகத்தைத் தமிழ்நாட்டில் நிறுவிடவேண்டும் என ரவிக்குமார் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மக்களவை உறுப்பினர்  ரவிக்குமார்
விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்

விழுப்புரம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் நேற்று (ஜுன் 7) நேரில் சந்தித்தார். அப்போது 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் ரவிக்குமார் வழங்கினார். அந்த மனுவில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:

சிறப்பான பணி

"தாங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்கு, எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரும் வெற்றியைத் தமிழ்நாடு அரசு சாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை மருத்துவ நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்குத் தமிழ்நாட்டிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்துப் பின்வரும் கோரிக்கைகளைத் தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்:

  • தற்போது மேற்கொள்ளப்பட்ட சீரோ பாசிட்டிவிட்டி சர்வேயில் (Sero positivity survey) மாநில சராசரியைவிடக் (23%) குறைவாக இருக்கும் விழுப்புரம் (17%) உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஜெனோம் சீக்வென்ஸிங்' ஆய்வு

  • தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த B.1.617.2 என்ற கரோனா வைரஸே அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது என்பது 'ஜெனோம் சீக்வென்ஸிங்' ஆய்வில் தெரிய வந்திருப்பதால், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  • 'ஜெனோம் சீக்வென்ஸிங்' செய்வதற்கான ஆய்வகத்தைத் தமிழ்நாட்டிலேயே நிறுவிட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்ற மாவட்டவாரியான புள்ளிவிவரம் தினமும் வெளியிடப்பட்டு, வரும் மருத்துவ அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.

விழுப்புரத்தில் மாற்றவேண்டியவை

  • விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையையும், உளுந்தூர்பேட்டையில் உள்ள மருத்துவமனையையும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக அறிவிக்க வேண்டும்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதுள்ள ஐசியூ படுக்கைகளின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 200 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப செவிலியரின் எண்ணிக்கையையும் உயர்த்தவேண்டும்.
  • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 200 ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கான ஆக்ஸிஜன் டேங்க் வசதி செய்யப்பட வேண்டும்.

கவனிக்கவேண்டிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

  • கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கிராமப்புற மக்களுக்கான சுகாதாரச் சேவையை அளித்து வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 55 உள்ளன. அவற்றில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதற்கேற்ப ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • 'கரோனா கேர் சென்டர்'-களில் போதுமான அளவில் மருத்துவர்களையும், செவிலியரையும் நியமித்து அங்கிருக்கும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, உயிர் இழப்பவர்களின் குடும்பத்தினரிடம் இறப்புச் சான்றிதழ் வழங்கும்போது, கரோனா மரணம் என்பதைக் குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு மருத்துவமனைகளை அறிவுறுத்த வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எப்போது? சீமான் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.