ETV Bharat / state

"ஏய் நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?" - ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் பெண் காவல் ஆய்வாளர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 2:25 PM IST

Villupuram quary issue: விழுப்புரம் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்படும் கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவரை காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

விழுப்புரம்: வானூா், திருவக்கரை, தொள்ளாமூா், எறையூா், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறாக செயல்படும் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கல் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளாக உடைக்கப்படுகின்றன.

பின்னர் இவை கட்டுமானம் சார்ந்த தொழில்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிக்களுக்காக விழுப்புரம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள் மூலமாக தினசரி அனுப்பப்படுகிறது. இந்த கல்குவாரிகள் அரசு விதித்த விதிமுறைகளின் கீழ் செயல்படுவதில்லை எனவும் அரசு நிர்ணயித்த கனிம வளத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதல் ஆழங்களில் கருங்கற்களை வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தகைய செயலால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வானூா் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டி.பி.எல் என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படும் தனியாா் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகவும், கூடுதல் ஆழத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதனால் கல்குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்றைய முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் காலை 10 மணி அளவில் கல்குவாரியை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையில் பங்கேற்ற பெரும்பாக்கம் ஊராட்சித் தலைவா் ராஜாங்கம், கல்குவாரி பணியாளர்களிடம் உடனடியாக கல்குவாரி இயங்குவதை நிறுத்துங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தகவலறிந்து வந்த மயிலம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினா் அங்கு சென்று கல்குவாரியைப் பாா்வையிட்டனா். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த நிகழ்வு தொடர்பாக கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் மற்றும் மயிலம் காவல் ஆய்வாளருக்கும் இடையே நடந்த வாக்குவாதமானது வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காவல் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் தோணியில் பேசியிருப்பதாக தெரிகிறது.

அதில், “கல்குவாரியை மூடுவதற்கான ஆணையை காட்டு. உனக்கு யார் இத்தகைய அதிகாரம் கொடுத்தது. ஊராட்சி மன்ற தலைவர் என்றால் நீ பெரிய இவரா? எனவும், கல்குவாரி உரிய அனுமதியுடன் தான் செயல்படுகிறது என்றும் ஒருமையில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி விவகாரம்: ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கிய வேல்முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.