ETV Bharat / state

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசு முடக்கப் பார்க்கிறது - முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jun 28, 2021, 11:08 PM IST

ஜெயலலிதா பல்கலைகழகத்தை முடக்கும் நோக்கத்துடன் ஆளும் அரசும், உயர் கல்வி செயலாளரும் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்காகவும், மாணவர்களின் நலன் கருதியும், கடந்த அதிமுக ஆட்சியில், பிப்., 25ஆம் தேதி விழுப்புரம் திரு.வி.க.,வீதியில் டாக்டர் ஜெயலலிதா பல்கலைகழகம் தொடங்கப்பட்டது.

தற்போது உயர்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெயரில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல்கலை., முடக்க திட்டம்

இந்த விவகாரம் குறித்து முன்னாள சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்காக அண்ணா புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தன்னிச்சையான அறிவிப்புகளை அறிவித்து மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசும், உயர்கல்வித்துறை செயலாளரும் செயல்படுகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது அவரையே உயர் கல்வித்துறை செயலாளராக நியமித்துள்ளார்.

இதனால் திமுக ஆட்சியில் மேலும் பல பதவிகளை பெற கார்த்திகேயன், இதுபோன்ற செயல்களில் ஈடுப்படுவதாக தெரிவித்தார்.

அரசியல் செய்யக் கூடாது

தொடர்ந்து ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்யாமல், மாணவர்களின் நலன் கருதி உடனடியாக இதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டு என,வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கும், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவருமான உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். இதில் எவ்வித அரசியலும் இல்லை என தெரிவித்தார்.

விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பலக்கலைக்கழக விவகாரத்தில் முதலமைச்சரும், உயர்க்கல்வி துறை அமைச்சரும் ஒருதலை பட்சமாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அதிமுக ஈடுப்படும் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கோயில்களில் பணியாற்றும் தினக்கூலிகளை நிரந்தரமாக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.