ETV Bharat / state

வேலூரில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 7:10 AM IST

Updated : Sep 1, 2023, 10:53 AM IST

Woman was Killed in an Elephant Attack in vellore: வேலூர் மாவட்டம் போடிநத்தம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, வனத்துறையின் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Woman was Killed in an Elephant Attack in vellore
வேலூரில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

வேலூர்: பெரிய போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60) இவரது மனைவி வசந்தா (54). இவர்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான சூளைமேடு பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டின் பின்புறத்தில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு மேய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) அதிகாலை 5 மணியளவில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் சத்தமிடுவதை கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தபோது அங்கு ஒரு ஆட்டை யானை மிதித்துக் கொன்றதைக் கண்டுள்ளார்.தொடர்ந்து வசந்தா அந்த யானையை விரட்ட முயன்றுள்ளார். அதேசமயம், பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள் யானை வசந்தாவைத் தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானையை விரட்டினார்.

இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மருத்துவ குழுவினர் வசந்தாவைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மேல்பாடி போலீசார், ஆற்காடு சரக வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையைக் கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு, போராடிப் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சுற்றித்திரிந்ததுடன் அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது. புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை அப்பகுதியில் கார்த்தி என்கிற இளைஞரைத் தாக்கியதுடன், அங்கு வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வெங்கடேஷ், செல்வி என்ற தம்பதியையும் மிதித்துக் கொன்றது.

இதையடுத்து, ஆந்திரா வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையைக் காட்டுக்குள் விரட்டியடித்ததால் அந்த யானை ஆந்திரா எல்லைப் பகுதியைக் கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. பின்னர், வேலூர் மாவட்டம் காட்பாடி, பொன்னை, மகிமண்டலம் என தமிழகம்-ஆந்திரா எல்லைப் பகுதிகளில் ஆக்ரோஷமாகச் சுற்றித்திரிந்த யானை இன்று (ஆகஸ்ட் 31) அதிகாலை பெரியபோடிநத்தத்தில் வசந்தா என்ற பெண்ணை மிதித்துக் கொன்றுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வனத்துறையின் சார்பில் வன உயிரின மோதல்களைத் தவிர்க்க வழங்கப்படும் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த வசந்தாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையில் முதற்கட்டமாக ரூ.50,000கான காசோலையினை மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உயிரிழந்த வசந்தாவின் குடும்பத்தாரிடம் வழங்கினார். மீதமுள்ள ரூ.4,50,000 விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேலூரில் 3 பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானை.. போராடி பிடித்த வனத்துறை!

Last Updated : Sep 1, 2023, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.