ETV Bharat / state

திருவள்ளுவர் பல்கலை.யில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்!

author img

By

Published : Jun 15, 2023, 4:58 PM IST

திருவள்ளுவர் பல்கலை.யில் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான மதிப்பூதியம் மற்றும் தேர்வு தொடர்பான பணிகளுக்கான அகவிலைப்படி, பயணப்படி தொகை உயர்த்தாமல் இருப்பதால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

thiruvallur university
திருவள்ளூவர் பல்கலைக்கழகம்

வேலூர் மாவட்டம்: வேலூர் அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டிலிருந்தே சர்ச்சைகள், முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, தேர்வுத்துறை குளறுபடிகளால் மாணவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டண விகிதங்கள் பல மடங்கு உயர்ந்த நிலையில் ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான மதிப்பூதியம் மற்றும் தேர்வு தொடர்பான பணிகளுக்கான அகவிலைப்படி, பயணப்படிக்கான தொகை உயர்த்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் தொடங்க உள்ள விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் சுமார் 8 லட்சம் விடைத்தாள்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் திருத்தப்படுகிறது. ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் பணிக்காக மதிப்பூதியமாக இளநிலைப் பாடப்பிரிவாக இருந்தால் ரூ.12 எனவும், முதுநிலைப் பாடப்பிரிவாக இருந்தால் ரூ.15ம் வழங்குகின்றனர். இளநிலை பாடப்பிரிவில் ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு 50 விடைத்தாள்களையும், முதுநிலை பாடப்பிரிவாக இருந்தால் 40 விடைத்தாள்களையும் திருத்த வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட மதிப்பூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்று 2019-ம் ஆண்டு முதல் கேட்டு வருகிறோம். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருக்கின்றது. மதிப்பூதிய உயர்வுக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்விக் குழுமம் அனுமதி வேண்டும் என்று இல்லாத ஒரு புதிய விதியை தெரிவிக்கின்றனர்’’ என்றனர்.

திருவள்ளுவர் பல்கலையில் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு முதலாமாண்டு மாணவர் பதிவுக் கட்டணம் ரூ.268-ல் இருந்து ரூ.750 ஆனது. இளநிலை பாடப் பிரிவுகளுக்கு ஒரு தாள் கட்டணம் ரூ.68-ல் இருந்து ரூ.90 ஆகவும், முதுநிலை படிப்பு பாடப்பிரிவுகளுக்கு ஒரு தாள் ரூ.113-ல் இருந்து ரூ.145ஆனது. மதிப்பெண் கட்டணம் ரூ.38-ல் இருந்து ரூ.75ஆகவும், ஒட்டுமொத்த பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் இளநிலை படிப்புக்கு ரூ.375-ல் இருந்து ரூ.750 ஆகவும், முதுநிலைப் படிப்புக்கு ரூ.450-ல் இருந்து ரூ.900ஆகவும் உயர்ந்தது.

பட்டப்படிப்புச் சான்றிதழ் ரூ.225-ல் இருந்து ரூ.600ஆகவும், இளநிலைப் படிப்பில் விடைத்தாள் மறு மதிப்பீடு ஒரு தாளுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.400ஆகவும், முதுநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.400-ல் இருந்து ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளதாக பட்டியல் நீள்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ஆன்டணி பாஸ்கரன் கூறுகையில், ‘‘விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு தொடர்பான பணிகளுக்கான மதிப்பூதியம் உயர்த்துவது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் முன்னிலையில் கடந்த ஜனவரி 30-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெற்று உயர்த்தப்படும் என்று தெரிவித்தனர்.

அதன் பிறகு இரண்டு முறை ஆட்சிமன்றக் குழு கூடியும் விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு தொடர்பான பணிகளுக்கான மதிப்பூதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. எங்கள் கோரிக்கையாக இளநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.16-க்கு அதிகமாகவும், முதுநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.20-க்கு அதிகமாகவும் வழங்க வேண்டும். கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலையில் 2019 முதல் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கு ரூ.16, முதுநிலைப் பாடங்களுக்கு ரூ.20 என வழங்கப்படுகிறது. அதே போல் சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலையில் இளநிலைப் படிப்பு ஒரு தாளுக்கு ரூ.15, முதுநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.18 வழங்குகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்கான மதிப்பூதியம் உயர்த்தாததால் பல்கலைக்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரிகளிலும் மதிப்பூதியம் உயர்த்த மறுக்கின்றனர். அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிக்கான முன்பணம் வழங்குவதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதம் செய்கின்றது.

தனியார் கல்லூரிகளில் ஏதாவது ஒரு நிதியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளில் எங்கிருந்து பணம் கொடுக்க முடியும். எங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு கல்விக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுவில் எங்களுக்கான பிரதிநிதிகள் யாரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இல்லை. கல்விக்குழுவில் இடம் பெற வேண்டிய ஆசிரியர், பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தாமல் இருக்கின்றனர்.

இதனால், ஆட்சிமன்றக் குழுவிலும் ஆசிரியர் பிரதிநிதிகள் இடம் பெறமுடியவில்லை. கல்விக்குழுவில் ஆசிரியர் பிரதிநிதிகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பல்கலைக்கழகம் நிலுவையில் வைத்திருக்கிறது. கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க உள்ளோம். அந்த நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம்’’ என்றார்.

இதையும் படிங்க: "சாதி வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாஸ்" பிசிஆர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விசிக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.