2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை.. 3வது மனைவிக்கு தயாரான கணவர் மீது புகார்!

2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை.. 3வது மனைவிக்கு தயாரான கணவர் மீது புகார்!
வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு பெண்ணையும் ஏமாற்றி வருகிறார் என இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வேலூர்: அணைக்கட்டு தாலுகா செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சில்பா (26). இவருக்கும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது வரதட்சணையாக 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுரேஷ் கிருஷ்ணா உடன் 3 மாதங்கள் மட்டுமே சில்பா வாழ்ந்துள்ளார். அதன்பிறகு 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு சில்பாவை சுரேஷ் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சுரேஷ் கிருஷ்ணாவின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கையின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனிடையே வரதட்சணை கொடுமை தாங்க முடியாத சில்பா 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றோரிடம் இருந்து பெற்று, தனது கணவர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், சில நாட்களிலேயே மேலும் பணம் கேட்டு சில்பாவை சுரேஷ் அடித்துள்ளார். மேலும் சில்பாவை வீட்டை விட்டு சுரேஷ் துரத்தி உள்ளார். இந்த நிலையில், சில்பா அவருடைய பெற்றோருடன் சென்று சேத்துவண்டை ஊர் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். அப்போதுதான் ஏற்கனவே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆனதும், அந்த பெண்ணையும் வரதட்சணை கேட்டு அடித்து துரத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஊர் மக்களின் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பட்டு, சில்பாவோடு சுரேஷ் கிருஷ்ணா சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்துள்ளார். இருப்பினும், 2 வாரங்கள் மட்டுமே அன்பாக நடப்பதுபோல் நடித்து, மீண்டும் வரதட்சணை கேட்டு சில்பாவை அடித்து துரத்தியுள்ளனர், சுரேஷ் குடும்பத்தினர். இதனால் கடந்த 2 வருடங்களாக சில்பா, தனது தாயார் வீட்டிலே இருந்துள்ளார்.
இந்த நிலையில், சுரேஷ் கிருஷ்ணா 3வதாக திருமணம் செய்து கொள்வதற்கு வேறோரு பெண்ணிடம் செல்போனில் பேசி வருவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சில்பா தனது கணவர் சுரேஷ் கிருஷ்ணா மீதும், அவருடைய குடும்பத்தார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், 3வதாக பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றக் கோரியும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரியில் வரதட்சணை கொடுமையின் உச்சம்.. கைக்குழந்தையுடன் பஸ் ஸ்டாண்டில் தவித்த இளம்பெண்!
