ETV Bharat / state

திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம்.. போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் கடும் அவதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:49 PM IST

Trichy - Chennai National Highway: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Trichy - chennai national highway
Trichy - chennai national highway

திருச்சி - சென்னை மேம்பாலம் சேதம்.. போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் கடும் அவதி!

திருச்சி: திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில் நிலையத்தை ஒட்டி இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. கடந்த, 2010ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடது புறம் உள்ள பகுதிகளில் பாலத்தின் வெளிப்புற கற்கள் நேற்று (ஜனவரி 12) திடீரென சரிந்தது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் விழும் அபாயம் ஏற்பட்டது.

ஜி கார்னர் பகுதியில் உள்ள இந்தப் பாலத்தின் தாங்கு தூண்களில் ஒன்று சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால், பாலத்தைச் சீரமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.13) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நேற்று (ஜன.12) காலை 10 மணி முதல், ஜீ கார்னர் பகுதியில் இருந்து போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியை அடைத்து விட்டு திருச்சி வரும் மார்க்கத்தில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுல்லதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குச் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பயணிகள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த வழியாக மட்டுமே செல்ல முடியும்.

இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகச் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பயணிகள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.94 லட்சம் பேர் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.