ETV Bharat / state

பானிபூரி கடை போட்டால், பாலியல் வழக்கு போடுவேன்.. மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு..

author img

By

Published : Mar 3, 2023, 11:00 AM IST

பானிபூரி கடை நடத்தினால் பாலியல் தொழில் செய்வதாக பொய் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டிய காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தம்பதி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

திருச்சி: அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி. இவரது கணவர் அரவான். இவர்கள் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி அருகே பானிபூரி கடை நடத்தி வந்துள்ளனர். இதனிடையே அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் பானிபூரி கடையை காலி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் பாலியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தம்பதியினர் நேற்றிரவு (மார்ச்.2) 8 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் உதவி ஆணையர், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பானிபூரி கடை நடத்தி வரும் அபிராமி-அரவான் தம்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் கடந்த 9 வருடங்களாக எஸ்.ஐ.டி கல்லூரி அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் யாரும் கடை நடத்த கூடாது என்று எஸ்.ஐ.டி.கல்லூரி நிர்வாகத்தினர் வேலி அமைத்துள்ளனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில் கடையை நடத்த அனுமதி வாங்கப்பட்டது. அதனடிப்படையில் மார்ச் 1ஆம் தேதி கடையை மீண்டும் தொடங்கினோம்.

இந்நிலையில் நேற்றிரவு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் எங்களை காவல் நிலையத்திற்கு திடீரென அழைத்து சென்று கடையை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், பாலியல் தொழில் செய்வதாக வழக்குப்பதிவு செய்துவிடுவேன் எனஅறு மிரட்டுகிறார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததோம். ஆனால், புகார் அளித்த சிறிது நேரத்தில் எங்களது பானிபூரி கடையின் வண்டியை சிலர் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இப்போது எங்களுக்கு வாழ வேறு வழியில்லை. எங்களை கொன்று விடுங்கள் எனக் கூறவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், பானிபூரி கடை அமைத்தால் உங்கள் மீது பாலியல் தொழில் செய்வதாக பொய் வழக்குப்பதிவு செய்வேன் எனக் கூறி காவல் ஆய்வாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பானிபூரி கடை நடத்துவதற்கு தங்களிடம் உயர் நீதிமன்றத்தில் பெற்ற அனுமதி உள்ளதாக கூறும் அந்த தம்பதியினரை, இவ்வாறு மன உளைச்சலுக்கும் உடல் அலைச்சலுக்கும் ஆளாக்கிய அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் மீதும் அவரின் பின்னணியில் இருப்போரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் - 10 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.